காணாமல் போன சிறுவன் என இரண்டு வெவ்வேறு குடும்பங்களுடன் இணைந்த ஒரே நபர்; குழம்பிய காவல்துறை
பீம் சிங் என்ற மோனு ஷர்மா என்று கூறிக்கொள்ளும் நபர், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் இரண்டு குடும்பங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாகக் கூறி, கண்ணீர் மல்க இணைந்து சிக்கலான மர்மத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில், சிறுவயதில் கடத்திச் செல்லப்பட்டு, கொத்தடிமைத் தொழிலில் தள்ளப்பட்டதாகக் கூறி தனது குடும்பத்துடன் 31 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்ததாக செய்திகள் வெளியாகின. பீம் சிங் 31 ஆண்டுகளுக்கு முன்பு தனது எட்டு வயதில் கடத்தப்பட்டதாகக் கூறி காசியாபாத் போலீஸை அணுகினார். அங்கு, ராஜஸ்தானில் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு, அடித்து, ஆடுகளை வளர்க்க வற்புறுத்தியது போன்ற கொடூரமான விசித்திரவதைகளை எதிர்கொண்டதாகக் கூறினார்.
உத்தரகண்டிலும் இதே வேலையைச் செய்த பீம் சிங்
முன்னதாக, கடந்த ஜூலை மாதம் உத்தரகாண்டின் டேராடூனில் ஒரு குடும்பத்துடனும் பீம் சிங், மோனு ஷர்மா என்ற பெயரில் ஒரு குடும்பத்துடன் இணைந்துள்ளார். அங்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தங்கள் மகன் என்று கூறி ஐந்து மாதங்களுக்கு முன்பு டேராடூன் குடும்பத்துடன் மீண்டும் இணைந்த தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய காசியாபாத் சம்பவத்தின் புகைப்படங்கள் வெளியான பின்னர், இதுகுறித்து அறிந்த உத்தரகண்ட் பெற்றோர் கபில்தேவ் ஷர்மா மற்றும் ஆஷா ஷர்மா மீண்டும் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளனர். மோனு ஷர்மா எனும் பீம் சிங் சமீபத்தில் டெல்லிக்கு வேலைக்குச் செல்வதாக கூறி, டேராடூனில் இருந்து கிளம்பியதாகவும், பின்னர் தங்கள் தொடர்பை துண்டித்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
காவல்துறை விசாரணை
டேராடூனில் இருந்து திடீரெனப் புறப்பட்ட அந்த நபர், காசியாபாத்தில் மீண்டும் இதேபோல் வேறு ஒரு குடும்பத்துடன் இணைந்துள்ள நிலையில், அவரது உண்மையான அடையாளத்தைக் கண்டறிய இரண்டு மாநில காவல்துறையும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. அந்த நபர் சாத்தியமான நிதி மோசடியில் ஈடுபடும் நோக்கத்துடன் இதைச் செய்கிறாரா என்பது குறித்தும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையே, குறிப்பிடத்தக்க வகையில், டேராடூன் குடும்பத்திலும், காசியாபாத் குடும்பத்திலும், காணாமல் போனவரின் தந்தை மோனு ஷர்மா எனும் பீம் சிங்கை சந்தேக நோக்கத்துடனேயே எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக காசியாபாத் தந்தை தனது மகன் என்பதை இறுதி செய்ய டிசம்பர் 5ஆம் தேதிக்கு பிறகு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள இருந்ததும் குறிப்பிடத்தக்கது.