விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்-சங்கர் மிஸ்ராவிற்கு 4 மாதங்கள் ஏர்இந்தியா விமானத்தில் செல்ல தடை
கடந்த நவம்பர் 26ம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று அமெரிக்கா நியூயார்க் நகரில் இருந்து தலைநகர் டெல்லிக்கு புறப்பட்டது. அப்போது அதில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர், அதே வகுப்பில் பயணித்த 70 வயது மதிக்கத்தக்க பெண் மீது சிறுநீர் கழித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் அளவில் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் சம்பந்தப்பட்ட நபர் மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா (34) என்று தெரியவந்ததையடுத்து, அவருக்கு ஏர்இந்தியா விமானத்தில் பயணம் செய்ய 30 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. பின்னர் இவர் மீது போலீசாரிடம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், டெல்லி போலீசார் அவருக்கு லுக்அவுட் நோட்டிஸ் வெளியிட்டது.
ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய 4 மாதங்களுக்கு தடை
இதனையடுத்து, பெங்களூரில் தலைமறைவாக இருந்த சங்கர் மிஸ்ராவை போலீசார் சம்பவம் முடிந்து 6 வாரங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவருக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய 4 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளதாக ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் ஏர் இந்தியா நிறுவனம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. முன்னதாக, விமானத்தில் நடந்த விவகாரத்தை பாதிக்கப்பட்ட பெண் விமான ஊழியர்களிடம் தெரிவித்தும், அவர்கள் மிக அலட்சியமாக செயல்பட்டதாக கூறப்பட்டதால் அந்நிறுவனம் மீது விசாரணை நடத்த மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.