சென்னை-திருச்சி விமானத்தில் அவசரகால கதவை திறந்த பயணி
கடந்த மாதம் 10ம் தேதி சென்னையிலிருந்து திருச்சி செல்வதற்காக இண்டிகோ விமானம் ஒன்று தயார் நிலையில் நின்று கொண்டிருந்தது. அதில் பயணிகள் வரிசையாக ஏறி கொண்டிருந்துள்ளனர். அப்போது விமானத்தில் ஏறிய பயணி ஒருவர் தவறுதலாக வலது பக்கம் இருந்த அவசரக்கால கதவினை திறந்துள்ளார். இதனை கவனித்த விமான சிப்பந்திகள் உயர் அதிகாரிகளுக்கு உடனே தகவல் அளித்துள்ளார்கள். அதன்பேரில், அவசரக்கால கதவு உடனடியாக பொருத்தப்பட்டு சரிபார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. விமானத்தின் அழுத்தமும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, கட்டாயமாக மேற்கொள்ளவேண்டிய அனைத்து எஞ்சினியரிங் சோதனைகளும் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
விமான பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்யப்படவில்லை என அறிக்கை வெளியீடு
விமான நிலையத்திலேயே அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்ட பின்னரே விமானம் புறப்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட 42நிமிடங்கள் தாமதமாக விமானம் கிளம்பியதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த சம்பவம் குறித்து இண்டிகோ சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அவசரக்கால கதவை திறந்த பயணி, அவர் செய்த செயலுக்கு உடனடியாக மன்னிப்பு கோரியதாக கூறியுள்ளது. இதேபோல், விமானபோக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகமான டிஜிசிஏ, விமான பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்யப்படவில்லை என்று அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் டிஜிசிஏ உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் கடந்த நிலையில், தற்போதுதான் இதுகுறித்து வெளியே தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.