அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24.80 லட்சம் மோசடி செய்த நபர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் அடுத்துள்ள கழுதைப்பட்டி என்னும் பகுதியினை சேர்ந்தவர் ராமசந்திரன்(25). எம்.எஸ்.சி.படித்துள்ள இவர் அரசு பள்ளியில் ஆசிரியர் பணிக்காக பல்வேறு முயற்சிகளை எடுத்துவந்துள்ளார். இதற்கிடையே தருமபுரி மாவட்டம் அருகே ஒட்டப்பட்டியை சேர்ந்த புஷ்பலிங்கம்(34) என்பவருடன் இவருக்கு பழக்கம் இருந்துவந்துள்ளது. அவரிடம் ராமசந்திரன் தனக்கு எப்படியாவது அரசு பள்ளியில் ஆசிரியர் வேலைவேண்டும் என்று கூறியுள்ளதாக தெரிகிறது. இதனைப்பயன்படுத்தி கொண்ட புஷ்பலிங்கம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் இவரிடம் இருந்து 24 லட்சத்து 80 ஆயிரம் தொகையினை அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி வாங்கியுள்ளார். ஆனால் இதுவரை ராமச்சந்திரனுக்கு வேலை எதுவும் அவர் வாங்கித்தரவில்லை. 3 ஆண்டுகள் கழிந்த நிலையில், வேலை எதுவும் கிடைக்காத காரணத்தினால் தான்னை அந்த நபர் ஏமாற்றியதை உணர்ந்துள்ளார் ராமச்சந்திரன்.
மோசடி செய்த நபரை கைது செய்த காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்
இதனால் அவர் புஷ்பலிங்கத்திடம் தான் கொடுத்த பணத்தினை திருப்பு கேட்டுள்ளார். ஆனால் அவர் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனை தொடர்ந்து ராமசந்திரன் கல்லாவி காவல் நிலையத்தில், புஷ்பலிங்கம் என்பவர் தன்னிடம் அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி தவணை முறையில் ரூ.24.80 லட்சத்தினை வாங்கினார். வேலை வாங்கித்தராத பட்சத்தில், தற்போது பணத்தினை திருப்பி கேட்டால் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். மேலும் என்னை திட்டியும், மிரட்டல் விடுத்தும் வருகிறார் என்று புகாரளித்துள்ளார். இதன் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் புஷ்பலிங்கத்தை கைது செய்து ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிருஷ்ணகிரி சிறையில் அடைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.