டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பதில்
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் குறித்த சென்டர்களில் பயின்ற மாணவர்கள் மட்டும் அதிகமதிப்பெண் பெற்று தேர்வாகியுள்ளதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவந்தது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானத்தினை கொண்டுவந்தார். அப்போது பேசியஅவர், குரூப் 4 தேர்வு விவகாரத்தில் மிகபெரிய முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேடு விவகாரம் தேர்வர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த குழப்பத்தினை தீர்க்கும் வகையில், முறைகேடு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் பதிலளித்துள்ளார். அப்போது பேசியஅவர், தென்காசி மாவட்டத்தில் மொத்தமே 397 பேர் தான் தேர்ச்சிப்பெற்றுள்ளார்கள். 2000பேர் தென்காசியில் தேர்வுபெற்றதாக விளம்பரம் செய்த நபர் தவறாக விளம்பரம் செய்துள்ளார் என்று தெரிவித்தார்.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம்
அதேபோல் 2000 பேர் தேர்ச்சிப்பெற்றதாக கூறப்படும் பயிற்சி மையம் தமிழகத்தின் பல மாவட்டங்களில் தேர்வு மையங்களை வைத்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கிறது என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மனிதவள மேலாண்மைத்துறை செயலாளரிடம் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முறைகேடு புகார் வந்தவுடனே செயலாளரிடம் விசாரிக்குமாறு அறிவுறுத்தினேன். டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் சீர்திருத்தங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார். மேலும் குரூப்4 தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்கள் விவரங்கள் மாவட்டவாரியாக கேட்கப்பட்டுள்ளது. காரைக்குடியில் ஒரே தேர்ச்சி மையத்தில் தேர்வெழுதிய 615 பேர் தேர்ச்சி பெற்றது குறித்தும் தேர்வுமைய அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.