மல்லையாவிடம் கடனை அடைக்க தேவையான ரூ. 7,500 கோடி இருந்தது: CBI
இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பல கோடி ரூபாய் கடன் மோசடியில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2017 இல், மல்லையாவிடம் போதுமான பணம், அதாவது ரூ. 7,500 கோடி இருந்தது. ஆனால், அவர் வங்கிகளின் கடன்களை அடைப்பதற்கு பதிலாக வெளிநாட்டில் சொத்துக்களை வாங்கி இருக்கிறார் என்று CBI தெரிவித்திருக்கிறது. 2015ஆம் ஆண்டில், ராஜ்யசபாவில் இருந்து ராஜினாமா செய்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு, மல்லையா தனது "எம்பி அந்தஸ்தை" பயன்படுத்தி சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கி இருக்கிறார்.
ஐரோப்பா முழுவதும் 330 கோடி மதிப்பிலான சொத்துக்களை வாங்கிய மல்லையா
கடந்த வாரம் வெளியிடப்பட்ட சிபிஐயின் மூன்றாவது துணை குற்றப்பத்திரிகையில், ஆகஸ்ட் 2017 இல் மல்லையாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 7,500 கோடியாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015-16 ஆம் ஆண்டில், மல்லையா இங்கிலாந்தில் சுமார் 44 நிறுவனங்களை நிறுவி இருக்கிறார் என்றும் ஐரோப்பா முழுவதும் 330 கோடி மதிப்பிலான சொத்துக்களை வாங்கி இருக்கிறார் என்றும் இந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் மல்லையா கணக்கு வைத்திருக்கும் சுவிஸ் வங்கியான கம்பைன் பாங்கேர் ஹெல்வெட்டிக் வங்கியின் தரவுகள் கூறுகின்றன என்று சிபிஐ தெரிவித்துள்ளது.