காங்கிரஸ் கட்சியில் அமைதியின்மை: மக்களவை தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கே போட்டியிடமாட்டார் என தகவல்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் நடந்த பேச்சுவார்த்தையின் போது கர்நாடகாவின் குல்பர்கா தொகுதியில் கார்கேவை நிற்க வைப்பது குறித்து கட்சி தலைவர்கள் விவாதித்தனர். ஆனால், அவர் தனது மருமகன் ராதாகிருஷ்ணன் தொட்டமணியை அந்த தொகுதிக்கு பரிந்துரைக்க வாய்ப்புள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் என்டிடிவியிடம் தெரிவித்துள்ளன. கார்கே குல்பர்கா தொகுதியில் இருந்து இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் 2019 இல் அந்த தொகுதியில் நின்று தோல்வியடைந்தார். எனவே, அவர் தற்போது ராஜ்யசபா எம்பியாக பணியாற்றி வருகிறார். அவர் ராஜ்யசபாவின் எதிர்க்கட்சி தலைவர் ஆவார். ராஜ்யசபாவில் அவரது பதவிக்காலம் இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன.
காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் பிரச்சனைகள்
கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார். மக்களவை தேர்தலில் போட்டியிடுவதில் அவருக்கு விருப்பம் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மாநில அமைச்சர்களை பொதுத் தேர்தலில் நிறுத்த காங்கிரஸ் கட்சிக்கும் விருப்பம் இல்லை. "ஒரு தொகுதியில் மட்டும் கவனம் செலுத்தாமல், நாடு முழுவதும் கவனம் செலுத்த விரும்புகிறேன்" என்று கார்கே கூறியுள்ளார். இதுவரை காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிடாமல் இருந்ததில்லை. சமீப ஆண்டுகளில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இருப்பினும், ராகுல் காந்தி 2019 இல் ஸ்மிருதி இரானியிடம் தங்களது கட்சியின் கோட்டையான அமேதி தொகுதியை இழந்தார்.