மகளிர் உரிமை தொகை திட்டம் - சென்னை ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் செப்டம்பர் 15ம் தேதி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று முன்னதாக கூறியிருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் இந்த திட்டத்திற்கான பணிகள் மிக மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த திட்டத்திற்கான முதற்கட்ட முகாமில் சென்னையில் 4.7 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர், மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பான 2ம் கட்ட முகாம் வரும் ஆகஸ்ட் 16ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது என்று கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்
அதனை தொடர்ந்து, ஆகஸ்ட் 17ம் தேதி முதல் 28ம் தேதி வரை பொது மக்களின் வீடுகளை தேடி நேரில் சென்று தன்னார்வலர்கள் விண்ணப்பங்களை வழங்கவுள்ளனர் என்றும் கூறியுள்ளார். மகளிர் உரிமை தொகை முதற்கட்ட முகாமில் மொத்தம் 79.66 லட்ச விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி அன்று மட்டும் 2.63 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் செப்டம்பர் 15ம் தேதி காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை துவக்கி வைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.