மகாராஷ்டிராவில் 18 இடங்களில் போட்டியிட இருக்கும் காங்கிரஸ்
மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சியான மஹா விகாஸ் அகாடி கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு விவகாரத்தில் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்துள்ளன. இது குறித்து அடுத்த 48 மணி நேரத்திற்குள் முறையான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி மகாராஷ்டிராவில் இருக்கும் 48 இடங்களுள் 20 இடங்களில் போட்டியிடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் 18 தொகுதிகளிலும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்ற 10 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஐந்து இடங்களைக் கோரிய வஞ்சித் பகுஜன் அகாடி(VBA) என்ற பிராந்தியக் கட்சிக்கு சேனாவின்(யுபிடி) பங்கிலிருந்து 2 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன.
2019 தேர்தலின் போது மகாராஷ்டிராவின் நிலவரம்
மேலும் சுயேச்சை வேட்பாளரான ராஜு ஷெட்டியை சரத் பவாரின் கட்சி ஆதரிக்கும். மும்பையில் உள்ள ஆறு மக்களவைத் தொகுதிகளுள் நான்கில் சேனா(யுபிடி) போட்டியிடும் என்றும், மும்பையில் இருக்கும் மற்றொரு தொகுதியான மும்பை வடகிழக்கு தொகுதி VBAக்குவழங்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது. 2019 தேர்தலில் சேனா(அப்போது பிரிக்கப்படாமல், பாஜகவுடன் கூட்டணியில் இருந்த கட்சி) மும்பை தெற்கு மற்றும் வடமேற்கு உட்பட 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 25 இடங்களில் போட்டியிட்டு சந்திராபூரில் மட்டுமே வெற்றி பெற்றது, அதே சமயம் சரத் பவாரின் NCP(பிரிக்கப்படாதது) 19 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. போட்டியிட்ட 25 இடங்களுள் 23 இடங்களில் வெற்றி பெற்று, அந்த வாக்கெடுப்பில் பாஜக ஆதிக்கம் செலுத்தியது.