மருத்துவப் பொருட்களின் அதிகப்படியான விலை உயர்வு: மத்திய அரசிற்கு மகாராஷ்டிரா FDA கடிதம்
செய்தி முன்னோட்டம்
மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருத்துவ பொருட்களின் விலையை மத்திய அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் (FDA) ஆணையர் துகாராம் முண்டே கோரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிர மாநில விலை கண்காணிப்பு வளப் பிரிவு (MSPMRU) நடத்திய ஆய்வில், குளுக்கோஸ் ஏற்றுவதற்கான ஐவி செட், ஊசிகள், நெபுலைசர் மாஸ்க்குகள் போன்ற அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களுக்கு மருத்துவமனைகள் மற்றும் விற்பனையாளர்கள் பல மடங்கு கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வது அம்பலமாகியுள்ளது.
ஆய்வு முடிவுகள்
2,800% வரை கூடுதல் லாபம்: அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்
அவசர சிகிச்சை பெறும் உள்நோயாளிகளுக்கான மருத்துவப் உபகரணங்களின் கொள்முதல் விலையை விட 29 மடங்கு வரை அதிக விலைக்கு அவை நோயாளிகளுக்கு விநியோகிக்கப்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஐவி செட்: உற்பத்தி மற்றும் கொள்முதல் விலை வெறும் ₹11 மட்டுமே, ஆனால் நோயாளிகளிடம் ₹325-க்கு (2,800% கூடுதல் விலை) விற்பனை செய்யப்படுகிறது.
10ml சிரிஞ்ச்: கொள்முதல் விலை ₹6.75, ஆனால் ₹57.20-க்கு (747% கூடுதல் விலை) விற்கப்படுகிறது.
ஐவி கேனுலா: கொள்முதல் விலை ₹22.50, ஆனால் ₹424-க்கு (19 மடங்கு கூடுதல் விலை) விற்கப்படுகிறது.
சாடல்
'முற்றிலும் நியாயமற்ற பகல் கொள்ளை': FDA ஆணையர்
இந்த அதீத விலை உயர்வை "முற்றிலும் தர்க்கமற்றது மற்றும் நியாயமற்றது" என்று சாடியுள்ள ஆணையர் துகாராம் முண்டே, மத்திய மருந்துகள் துறைச் செயலாளருக்கு இது தொடர்பாக விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், "தயாரிப்பாளர்களின் உற்பத்திச் செலவு, சந்தைப்படுத்தல், விநியோகம் மற்றும் லாபம் ஆகியவை ஆரம்பக் கொள்முதல் விலையிலேயே அடங்கிவிடுகின்றன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு இந்த அத்தியாவசிய உபகரணங்கள் தவிர்க்க முடியாதவை என்பதால், அவர்களிடம் விலையைக் பேரம் பேசும் வாய்ப்பு இல்லை. இதனைப் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டுவது தவறானது," என்று குறிப்பிட்டுள்ளார்.
வலியுறுத்தல்
'டிபிசிஓ 2013' சட்டத்தின் கீழ் கொண்டுவர வலியுறுத்தல்
தற்போது நிலவும் சட்டப்பூர்வ விலை வரம்பு இன்மையை சாதகமாக பயன்படுத்தி, வர்த்தக ரீதியாக பொதுமக்கள் மீது கடுமையான நிதிச் சுமை சுமத்தப்படுவதாக FDA எச்சரித்துள்ளது.
எனவே, இதுபோன்ற மருத்துவ உபகரணங்களை மருந்துகள் (விலைக் கட்டுப்பாடு) ஆணை, 2013 (DPCO 2013) என்பதன் கீழ் கொண்டு வந்து, அவற்றின் உச்சவரம்பு விலையை மத்திய அரசு உடனடியாக நிர்ணயிக்க வேண்டும் என மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.