Loading...
பிரதமர் மோடியை சந்தித்த 81 வயது பள்ளி நண்பர்: நிலத்தைத் திரும்பக் கொடுத்த பாஜக MLA; என்ன நடந்தது?
பிரதமர் மோடியை சந்தித்த 81 வயது பள்ளி நண்பர்

பிரதமர் மோடியை சந்தித்த 81 வயது பள்ளி நண்பர்: நிலத்தைத் திரும்பக் கொடுத்த பாஜக MLA; என்ன நடந்தது?

எழுதியவர் Venkatalakshmi V
Sep 16, 2026
12:23 pm

செய்தி முன்னோட்டம்

மகாராஷ்டிரா மாநிலம் மீரா ரோட் பகுதியைச் சேர்ந்த 81 வயதான அஸ்கர் அலி வோரா என்ற முதியவர், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து முறையிட்டதைத் தொடர்ந்து, பாஜக எம்.எல்.ஏ நரேந்திர மேத்தா ஆக்கிரமித்திருந்த அவரது நிலம் அவரிடமே மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாஜக MLA நரேந்திர மேத்தாவிற்கு சொந்தமான 'செவன் எலவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' என்ற நிறுவனம் பாயந்தர் பகுதியில் உள்ள தனது நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி, கடந்த செப்டம்பர் 8 அன்று பிரதமர் மோடியை சந்தித்து முதியவர் அஸ்கர் அலி வோரா உதவி கோரினார். குஜராத்தின் வத்நகரில் உள்ள பி.என். பள்ளியில் பிரதமர் மோடியுடன் வோரா பயின்றிருந்தார்.

பின்னணி

15 ஆண்டுகால ஆக்கிரமிப்பு பின்னணி

1989-ஆம் ஆண்டு பாயந்தர் கிழக்கு நவகர் பகுதியில் அஸ்கர் அலி வோரா சுமார் 2,810 சதுர மீட்டர் நிலத்தை வாங்கினார்.

இருப்பினும், அந்த நிலத்தை அவர் யாருக்கும் விற்காத நிலையிலும், 2011-ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் 'சுவயம் பில்டர்ஸ்' மற்றும் எம்.எல்.ஏ நரேந்திர மேத்தாவின் நிறுவனம் அந்த நிலத்தை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

தன் நிலத்தை மீட்க கடந்த 15 ஆண்டுகளாகப் பல அரசு அதிகாரிகளிடமும் கதவுகளிடமும் ஏறி இறங்கிப் போராடிய முதியவருக்கு எந்த தீர்வும் கிடைக்காத நிலையில், அவர் பிரதமரை சந்தித்து முறையிட்டார்.

நிலம் ஒப்படைப்பு

மந்திராலயாவில் அவசரக் கூட்டம் & நிலம் ஒப்படைப்பு

பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்குப் பிறகு, மகாராஷ்டிரா அரசு அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டனர்.

முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் ஸ்ரீகர் பர்தேசி தலைமையில் மும்பை மந்திராலயாவில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதியவர் அஸ்கர் அலி வோரா, எம்.எல்.ஏ நரேந்திர மேத்தா, மீரா-பாயந்தர் மாநகராட்சி ஆணையர் ராதா பினோத் சர்மா மற்றும் நகர திட்டமிடுபவர் புருஷோத்தம் ஷிண்டே ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தின் போது, சர்ச்சைக்குரிய நிலத்தின் உடைமையைத் துறப்பதாகவும், அங்கே கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப் பெற்ற அனுமதியைத் திரும்பப் பெறுவதாகவும் எம்.எல்.ஏ நரேந்திர மேத்தா அதிகாரப்பூர்வக் கடிதம் சமர்ப்பித்தார்.

ADVERTISEMENT

புகார் வாபஸ்

சுமுக முடிவு மற்றும் புகார் வாபஸ்

2019-ஆம் ஆண்டு மெர்வின் பெர்னாண்டஸ் என்பவரிடமிருந்தே இந்த நிலத்தை தான் வாங்கியதாகத் தெரிவித்துள்ள எம்.எல்.ஏ நரேந்திர மேத்தா, நிலத்தைச் சரணடைந்ததோடு அல்லாமல், அஸ்கர் அலி வோராவிற்கு எதிராகத் தான் அளித்திருந்த முந்தைய புகாரையும் வாபஸ் பெற்றுக்கொண்டார்.

இரு தரப்பினரிடையேயும் சுமுகமான உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, 15 ஆண்டுகளாக நீடித்து வந்த நில ஆக்கிரமிப்புப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT