திருவள்ளூரில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலில் மகா கும்பாபிஷேகம்
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம் மதுரவாசல் என்னும் கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ ருக்மணி நாயிகா சமேத ஸ்ரீ வேணுகோபால பெருமாள் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயிலில் 13 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தாமல் இருந்துள்ளது. இதனால் நேற்று(மார்ச்.,27) இக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடந்தேறியது. ஆரணி தாசரதி பட்டாச்சாரி தலைமையில் புனித நீர் அடங்கிய கலசங்களை பட்டாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு விமான கோபுரம், மூலவர் உள்ளிட்டவைகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
கோயில் உற்சவர் மாட வீதி வழியாக திருவீதி உலா
பின்னர் மூலவருக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவையும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டதோடு, அன்னதானமும் கோயில் வளாகத்தில் அளிக்கப்பட்டது. அதனையடுத்து கோயில் உற்சவர் மாட வீதி வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த கோயில் கும்பாபிஷேக விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் கீதா கணபதி மற்றும் துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த விழாவில் நடந்த நிகழ்ச்சிகளின் ஏற்பாடுகள் அனைத்தும் எம்.எஸ்.வரதராஜன் தலைமையில் திருக்கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.