Loading...
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: இன்ஸ்டா பிரபலம் உட்பட இருவர் கைது 5 கிலோ தங்கம் மீட்பு
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் இன்ஸ்டா பிரபலம் உள்பட இருவர் கைது.

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: இன்ஸ்டா பிரபலம் உட்பட இருவர் கைது 5 கிலோ தங்கம் மீட்பு

எழுதியவர் Vasuki
Nov 14, 2026
06:32 pm

செய்தி முன்னோட்டம்

மதுரை காளவாசல் புறவழிச்சாலையில் அண்மையில் திறக்கப்பட்ட பிரபல தனிஷ்க் (Tanishq) தங்க நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 15 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி மற்றும் பிரபல யூடியூபர் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகிய இருவரைத் தனிப்படை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் சுமார் 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவத்தின் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் தலைமறைவு யூடியூபர் நிஷாந்தை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கொள்ளை

சாரம் வழியாக ஏறி லிப்ட் பாதையில் புகுந்த துணிகரக் கொள்ளை

மதுரை காளவாசல் புறவழிச்சாலையில் கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி மூன்று மாடிகளுடன் புதிய தனிஷ்க் நகைக்கடை திறக்கப்பட்டது.

தரைத்தளத்தில் விற்பனை நடைபெற்று வந்த நிலையில், மூன்றாவது தளத்தில் நகைகளைப் பாதுகாப்பாக வைக்கும் லாக்கர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், கடந்த வியாழக்கிழமை (நவ. 12) அதிகாலை 3 மணியளவில் கடையின் பின்பக்கத்தில் கட்டப்பட்டிருந்த சாரங்கள் வழியாக மேலே ஏறி, லிப்ட் திறப்புப் பாதை வழியாகக் கடைக்குள் புகுந்துள்ளார்.

பின்னர் அங்கிருந்த லாக்கர்களை உடைத்துச் சுமார் 15 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பிய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிசிடிவி ஆய்வு 

யூடியூபர் - இன்ஸ்டா பிரபலம் தொடர்பு

நகைக்கடை கொள்ளை குறித்து 9 தனிப்படைகள் அமைத்து மதுரை போலீஸார் விசாரணை நடத்தினர். சிசிடிவி மற்றும் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்ததில், யூடியூபர் நிஷாந்திற்கு இதில் நேரடித் தொடர்பு இருப்பது தெரிந்தது.

கொள்ளைக்குப் பிறகு அவர் மதுரை திருப்பாலையைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சியைத் தொடர்பு கொண்டு பேசியது அம்பலமானது.

இதையடுத்து மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன.

எஞ்சிய 10 கிலோ நகைகளுடன் தலைமறைவான யூடியூபர் நிஷாந்தைத் தனிப்படை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT