மதுரை மெட்ரோ - விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது
சென்னையை போல மதுரையிலும் மெட்ரா ரயில் சேவையினை கொண்டுவர அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான அறிக்கை பட்ஜெட் தாக்கலிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் அடுத்தகட்டமாக மதுரையில் மெட்ரோ திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த விரிவான திட்ட அறிக்கையை 75 நாட்களுக்குள் தயாரிக்க வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. மதுரை மாநகர் மக்களின் போக்குவரத்து வசதிக்காக மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்குமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னை நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டம்
இதனை தொடர்ந்து மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசகராக ஒப்பந்தத்தை ஆர்வி அசோசியேட்ஸ் ஆர்கிடெக்ட்ஸ் இன்ஜினியர்ஸ் & கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் நிறுவனத்திற்கு நேற்று(மார்ச்.,28) வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கூட்டம் இன்று(மார்ச்.,29) சென்னை நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான மெட்ரோஸில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குனர் திரு.த.அர்ச்சுனன் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் இந்த விரிவான திட்ட அறிக்கை 75 நாட்கள் காலக்கெடுக்குள் செய்து முடிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.