மதுரை சித்திரை திருவிழா - மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் அறிவிப்பு
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படும். திருவிழா நடக்கும் 12 நாட்களும் அம்மன் பலவகை வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருவது வழக்கம். இதன் முக்கிய அம்சமாக 8ம் நாள் மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கும். அன்றைய தினம் மீனாட்சியம்மன் மதுரை நகரின் பொறுப்பினை ஏற்று சித்திரை முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி நடைபெறும் என்பது ஐதீகம் ஆகும். அதன்படி மதுரை சித்திரை திருவிழா இந்தாண்டு வரும் ஏப்ரல் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை காண 6,000 பக்தர்களுக்கு அனுமதி
அதனை தொடர்ந்து மே 5ம் தேதி இத்திருவிழா தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் நிறைவு பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. திருவிழாவின் 10ம் நாளான மே 2ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடக்கும், 3ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறும். மே 5ம் தேதியோடு திருவிழா முடிவடையும் என்னும் நிலையில் கள்ளழகர் கோயில் சார்பில் 4ம் தேதி கள்ளழகர் எதிர்சேவை நடத்தப்படும். பின்னர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 5ம் தேதி நடக்கும். இதனையொட்டி மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை காண 6,000 பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்படவுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் பணியில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.