மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் - லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றம் செய்யப்பட்டு துவங்கப்பட்டது. அன்றைய தினத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரரும் வெவ்வேறு வாகனங்களில் மதுரை மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்கள். இந்த திருவிழாவின் முக்கிய அம்சமான மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் நேற்று(மே.,2) கோலாகலமாக அரங்கேறியது. இதனை தொடர்ந்து சித்திரை திருவிழாவின் 11வது நாளான இன்று(மே.,3) தேரோட்டம் மிக விமர்சையாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நடைபெற்றது. ஹர ஹர சங்கரா, சிவாய சங்கரா என்னும் முழக்கத்தோடு பக்தர்கள் தேரினை பிடித்து இழுத்தனர்.
நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்த தேரோட்டம்
அதன்படி அலங்காரம் செய்யப்பட்ட பிரமாண்ட பெரியத் தேரில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சமேதராக காட்சியளித்தார். சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறிய தேரினில் மீனாட்சியம்மன் அருள்பாலித்தார். திருக்கல்யாணத்தினை காண முடியாத பக்தர்களுக்காக அம்மனும், சுவாமியும் மணக்கோலத்தில் காட்சியளித்தார்கள். இந்த தேரோட்டமானது நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களை பரவச நிலை அடைய செய்தது. இந்த சித்திரை தேரோட்டத்தினை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பக்தர்கள் குவிய துவங்கியது. தொடர்ந்து இந்த தேரோட்டத்தினை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறையினர் சிறந்த முறையில் தீவிரமாக எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.