
மதுரை சித்திரை திருவிழா - வைகை அணையிலிருந்து 30ம் தேதி தண்ணீர் திறக்க உத்தரவு
செய்தி முன்னோட்டம்
மதுரை சித்திரை திருவிழா வரும் 23ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 2ம்தேதியும், திருத்தேரோட்டம் மே 3ம்தேதியும் நடைபெறவுள்ளது.
அதேபோல் மதுரை அழகர்கோவில் சித்திரை திருவிழா வரும் மே 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி மே 10ம் தேதி வரை நடக்கவுள்ளது.
இதற்கிடையே மே 3ம்தேதி மாலை 6 மணியிலிருந்து 7.10 மணிக்குள் அழகர்கோவிலிருந்து கள்ளழகர் புறப்பட்டு மதுரைக்கு வருகிறார்.
இந்த திருவிழாவின் உச்சகட்ட நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 5ம்தேதி நடக்கவுள்ளது.
இதில் கலந்துகொள்ள மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைத்தருவார்கள்.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும்பொழுது பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சும் வைபவம் ராமராயர் மண்டபத்தில் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வைகை
சுத்தமானத்தண்ணீரை மட்டுமே பீய்ச்சி அடிக்கவேண்டும் என வேண்டுகோள்
இதனைதொடர்ந்து, கள்ளழகர் வைகைஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக தேனியிலிருந்து வைகை அணை நீரானது ஆண்டுதோறும் திறக்கப்படுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு நடைபெறவுள்ள இந்த அழகர் ஆற்றிலிறங்கும் நிகழ்வுக்கு வரும் ஏப்ரல் 30ம்தேதி முதல் 6 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் அணையில் இருக்கும் அளவின் பொருட்டு தண்ணீர் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் அழகர் மீது சாயம் கலந்தத்தண்ணீரை அடிக்கிறார்கள்.
இதனால் சாமிச்சிலைகள், தங்கக்குதிரை வாகனம், ஸ்வாமிக்கு அணிந்திருக்கும் நகைகள், கள்ளழகரோடு வரும் பட்டர்கள் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே இந்தாண்டு பக்தர்கள் பாரம்பரிய முறையிலான தண்ணீர் பைகளை பயன்படுத்தவேண்டும்.
சுத்தமானத்தண்ணீரை மட்டுமே பீய்ச்சி அடிக்கவேண்டும் என்று அக்கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.