மதுரை எய்ம்ஸ் தலைவர் டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமன் காலமானார்
கடந்த 2015ம் ஆண்டு தமிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையப்போகிறது என்று அறிவிக்கப்பட்டது. 2018ம் ஆண்டு அதற்கான இடமாக மதுரை தோப்பூர் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கு அடுத்தாண்டு பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார். ஆனால் இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையப்பெறவில்லை. இதற்கிடையில், கடந்த அக்டோபர் மாதம் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு தலைவரை மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது. அதன் படி, மதுரை வி.என்.நரம்பியல் சிறப்பு மருத்துவமனை தலைவரான நாகராஜன் வெங்கட்ராமன் மதுரை எய்ம்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் தேசிய நரம்பியல் அறிவியல் ஆராய்ச்சி குழு தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கெளரவ பேராசிரியர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நெறிமுறைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் காலமானார்
இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக டாக்டர் எய்ம்ஸ் மருத்துவமனை தலைவரான நாகராஜன் வெங்கட்ராமன் அவர்கள் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இதனையடுத்து, அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை 12.15மணிக்கு காலமானார் என்று தகவல்கள் வெளியிடப்பட்டது. இவரது மறைவினை அவரது மருமகனும் மாநில கூட்டுறவுத்துறை செயலாளருமான ராதாகிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பகுதியில் உறுதி செய்துள்ளார். நாகராஜன் வெங்கட்ராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அடிக்கல்நாட்டி இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர், ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் 2021ம்ஆண்டு மார்ச் மாதம் செய்யப்பட்டது. ஒன்றரை ஆண்டுகள் கழிந்தும், இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானபணிகள் துவங்கவில்லை.