சென்னை பல்கலைக்கழகம் - ஆன்லைனில் பி.காம், பிபிஏ இளநிலை கல்வி
தமிழ்நாடு மாநிலம், சென்னை பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தொலைதூர கல்வி மையங்கள் மூலம் பி.காம், பிபிஏ உள்ளிட்ட இளநிலை கல்வி மற்றும் முதுநிலை கல்வியான எம்.காம் பட்டப்படிப்புகளை மாணவர்களுக்கு ஆன்லைனில் வழங்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன்படி வரும் கல்வியாண்டு முதல் ஆன்லைனில் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி, வீடியோ மூலம் வகுப்புகளை நடத்த அவுட்சோர்சிங் முறை கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதற்கு முன்னதாக பொருளாதாரவியல், வணிகவியல், பொது நிர்வாகம் உள்ளிட்ட 3 இளநிலை மற்றும் 6 முதுநிலை படிப்புகளை ஆன்லைனில் துவங்க பல்கலைக்கழகம் திட்டமிடுகிறது என்று செய்திகள் வெளியானது.
ஆன்லைன் திட்டம் குறித்து சென்னை பல்கலைக்கழக அதிகாரிகள்
ஆனால் சில காரணங்களால் அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, இத்திட்டத்தின் முதற்கட்டமாக தற்போது மேற்கூறப்பட்ட 3 பட்டபடிப்புகளை மட்டும் ஆன்லைனில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டம் குறித்து சென்னை பல்கலைக்கழக அதிகாரிகள் கூறுகையில், "பி.காம், பிபிஏ மற்றும் எம்.காம் உள்ளிட்ட இந்த மூன்று ஆன்லைன் பட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள், வகுப்புகள், தேர்வு உள்ளிட்ட அனைத்துமே ஆன்லைன் மூலமாகவே நடைபெறும்" என்று கூறியுள்ளனர். மேலும் அவர்கள், "இந்த பட்டப்படிப்பினை ஆன்லைன் மூலம் மேற்கொள்ளும் மாணவர்கள் எங்கிருந்தும் இந்த கல்வியினை பெறலாம்" என்றும் கூறியுள்ளார்கள்.