பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச SMS புகார்: தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி
செய்தி முன்னோட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டப் பெண் ஆட்சியருக்கு தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள சர்ச்சை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச செய்திகள் அனுப்பப்பட்டது மனுதாரருக்கு எப்படித் தெரியும் என கேள்வி எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ சி. அருள் விக்னேஷ், அம்மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகச் செய்தித்தாள்களிலும் சமூக வலைதளங்களிலும் தகவல்கள் வெளியாகி பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
பின்னணி
வழக்கின் பின்னணியும் மனுதாரரின் கோரிக்கையும்
இந்த விவகாரம் குறித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையமும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையை சேர்ந்த அதிமுக பெண் வழக்கறிஞர் திரிசூலி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், இப்புகார் குறித்து விசாரணை நடத்தக் கோரி கடந்த நவம்பர் 11-ஆம் தேதி காவல்துறை தலைமை இயக்குநரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்ற காரணத்திற்காக வழக்குப் பதிவு செய்யாமல் இருக்கக் கூடாது என்றும், மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகார் அளிக்கும் வரை காத்திருக்காமல், வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
விளக்கம்
அரசுத் தரப்பின் விளக்கம்
இந்த வழக்கு இன்று (நவம்பர் 23) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் முக்கியத் தகவல்களை நீதிமன்றத்தில் பதிவு செய்தார்.
கள்ளக்குறிச்சி தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி தமிழகத் தலைமை செயலாளரிடமோ அல்லது வேறு எந்த உயரதிகாரியிடமோ இதுவரை எவ்விதப் புகாரும் அளிக்கவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
கேள்விகள்
நீதிபதி லட்சுமி நாராயணனின் சரமாரி கேள்விகள்
அரசுத் தரப்பு வாதத்தை கேட்டறிந்த நீதிபதி லட்சுமி நாராயணன், மனுதாரர் தரப்பை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு அந்த சட்டமன்ற உறுப்பினர் ஆபாசச் செய்திகளை அனுப்பினார் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும் என்றும், இதற்கு உங்களிடம் என்ன உறுதியான ஆதாரம் உள்ளது என்றும் நீதிபதி வினவினார்.
செய்தித்தாள் அறிக்கைகளை வைத்து மனுதாரர் செயல்படலாம், ஆனால் நீதிமன்றத்தால் அப்படிச் செயல்பட முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், ஒரு ஐஏஎஸ் அதிகாரி தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது என்று நினைக்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரே புகார் அளிக்காத நிலையில் காவல்துறை எவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியும் என எதிர்பார்க்கிறீர்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
நீதிமன்ற உத்தரவு
அடுத்தகட்ட விசாரணை மற்றும் நீதிமன்ற உத்தரவு
வழக்கின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்ட நீதிபதி லட்சுமி நாராயணன், இந்த விவகாரம் குறித்துச் சம்பந்தப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் தமிழக தலைமைச் செயலாளரிடம் மீண்டும் ஒருமுறை முழுமையாக விசாரித்து, அவர்களின் நிலைப்பாட்டை அறிந்து நாளை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு அரசுத் தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
நாளை நடைபெறவுள்ள விசாரணையில் அரசுத் தரப்பு சமர்ப்பிக்கவுள்ள விளக்கத்தின் அடிப்படையில், இந்த வழக்கின் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என்பதால் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.