செந்தில் பாலாஜி விவகாரம் - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இவருக்கு வரும் ஆகஸ்ட் 8ம்தேதி வரை நீதிமன்றக்காவலினை சென்னை முதன்மை நீதிமன்ற அமர்வு வழங்கியுள்ளது. இதனிடையே இவர் இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரவி என்பவர் 2 வழக்குகளை பதிவு செய்திருந்தார். அதன்படி, எதன் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருப்பார்?அவரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஒரு வழக்கிற்கான மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இருதரப்பினரும் எழுத்துப்பூர்வமாக தங்கள் வாதங்களை தாக்கல் செய்துள்ளனர்
அதனைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜியை பதவிநீக்கம் செய்த தமிழக ஆளுநர் தனது உத்தரவினை திரும்பப்பெற அதிகாரமில்லை என மற்றொரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி.,சஞ்சய் கங்கா புர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு உள்ளிட்டோர் கொண்டு அமர்வு விசாரணை செய்துவந்தது. அதன்படி, அரசு தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டதை அடிப்படையாக கொண்டு ஒருவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கமுடியாது என்று வாதாடப்பட்டுள்ளது. இதனிடையே, ஆளுநர் அலுவலகத்திற்கு உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா?என கேள்வியெழுப்பியதாக கூறப்படுகிறது. முன்னதாக இருதரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று(ஆகஸ்ட்.,4)இருதரப்பினரும் எழுத்துப்பூர்வமாக தங்கள் வாதங்களை தாக்கல் செய்துள்ளனர். அதனையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பு தேதியினை குறிப்பிடாமல் நீதிபதி அமர்வு வழக்கினை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.