மாசி மாத பூஜை - பிப்., 12ம் தேதி சபரிமலை கோயில் நடை திறப்பு
கேரள மாநிலம், பத்தனம் திட்டா மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மலையாள மாதத்தின் முதல் 5 நாட்கள் ஒவ்வொரு மாதமும் திறப்பது வழக்கம். அதன்படி, மாசிமாத பூஜைக்காக வரும் 12ம்தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து மறுநாளான பிப்ரவரி 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை 5 நாட்களுக்கு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறவுள்ளது. இந்த 5 நாட்களுக்கு காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய் அபிஷேகம் உள்ளிட்ட பல பூஜைகள் செய்யப்படும், இதனை காண மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணிமுதல் இரவு 10 மணி வரையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காணிக்கையாக வந்த நாணயங்களை எண்ணும் பணியில் 540 பேர் கொண்ட குழு
அதேபோல் சாமி தரிசனம் காண வரும் பக்தர்களுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தையும் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. பக்தர்கள் வருகைக்கான முன்பதிவும் இன்று முதல் துவங்கியுள்ளது. சபரிமலை கோயிலின் 2022-23ஆண்டுக்கான மகரவிளக்கு பூஜை காலம் கடந்தமாதம் 20ம்தேதி சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் தேவஸ்தானத்துக்கு ரூ.380 கோடி வருமானம் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் சன்னிதானத்தை சுற்றியுள்ள காணிக்கை பெட்டிகளில் இருக்கும் பணம் குறிப்பாக நாணையங்கள் இன்னமும் எண்ணப்படாமல் உள்ளது. இதனை எண்ணுவதற்கான பணியில் தேவஸ்தானம் சார்பில் 540ஊழியர்கள் கொண்ட குழு ஈடுபட்டுள்ளது. கிட்டத்தட்ட ரூ.18 கோடி வரை வரும் என கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது