Page Loader
மகரவிளக்கு, மண்டல பூஜைகள் நிறைவு - சபரிமலை கோயில் நடை அடைப்பு
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு

மகரவிளக்கு, மண்டல பூஜைகள் நிறைவு - சபரிமலை கோயில் நடை அடைப்பு

எழுதியவர் Nivetha P
Jan 20, 2023
05:12 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த நவம்பர் 16ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் 2022ம் ஆண்டிற்கான மகரவிளக்கு பூஜை மற்றும் மண்டல பூஜைகளுக்காக திறக்கப்பட்டது. நவம்பர் 17ம் தேதி முதல் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டார்கள். 41 நாள் மண்டல பூஜை முடிந்து டிசம்பர் 28ம் தேதி நடை அடைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கோயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் டிசம்பர் 30ம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து 21 நாட்களாக நடைபெற்ற மகரவிளக்கு பூஜை நேற்றோடு நிறைவுப்பெற்றது. அதன்படி, ஜனவரி 19ம் தேதியான நேற்று இரவு 10 மணியோடு பக்தர்களுக்கான தரிசன அனுமதியும் நிறைவுற்றது.

கோயில் சாவி ஒப்படைப்பு

இன்று நடைதிறக்கப்பட்டப்பொழுது பந்தளம் ராஜா குடும்பத்தினர் மட்டும் சாமிதரிசனம் செய்ய அனுமதி

இதனை தொடர்ந்து, ஜனவரி20ம் தேதியான இன்று காலை வழக்கம் போல் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு காலை 6 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. நேற்று இரவு 10 மணிக்கு நடைபெற்ற குருதி வைபவத்திற்கு பிறகு மாளிகைபுரம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள், அதே போல் பக்தர்கள் மலையேறவும் அனுமதி கிடையாது. அதன்படி, இன்று காலை 5 மணிக்கு நடத்தப்பட்ட பூஜையின் பொழுது பந்தளம் ராஜா குடும்பத்தினர் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். இதனையடுத்து 18 படிகளை சாட்சியாக வைத்து, கோயில் சாவி அரச குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்வும், சுவாமி ஐயப்பனுக்கு மகரவிளக்கு பூஜை அன்று அணிவிக்கப்பட்டிருந்த ஆபரணங்கள் அடங்கிய பெட்டிகள் பந்தள அரண்மனைக்கு மீண்டும் கொண்டு செல்லும் வைபவமும் நடைபெற்றது.