கோயிலுக்குள் செல்ல நடிகை அமலாபாலுக்கு அனுமதி மறுப்பு - விளக்கமளித்த நிர்வாகம்
கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள திருவைராணிக்குளம் மகாதேவர் கோயிலுக்கு சமீபத்தில் அமலாபால் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். ஆனால் அவர் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 'இக்கோயிலுக்குள் இந்துபக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும், உங்களுக்கு அனுமதியளிக்க முடியாது' என்று கூறப்பட்டதாக தெரிகிறது. வேண்டுமென்றால் கோயிலுக்கு முன் உள்ள அம்மனை தரிசித்து செல்லுமாறும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமலாபால், "சாமி தரிசனம் செய்ய ஆசையாக வந்தேன். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது" என்றும், 2023ம் ஆண்டிலும் பாகுபாடு உள்ளது என்பதை நினைத்தால் வேதனையாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், பாகுபாடுகளில் விரைவில் மாற்றம் ஏற்படும் என்று நம்புவதாகவும், அனைவரையும் சமமாக நடத்தும் காலம் வரும் என்றும் கூறியுள்ளார்.
அமலாபாலுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்தால் பெரும் சர்ச்சை
அமலாபாலின் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. இது குறித்து கோயில் அறக்கட்டளை நிர்வாகி ப்ரசூன் குமார், பிறமதத்தினரும் கோயிலுக்குள் வந்து செல்கிறார்கள், அது யாருக்கும் தெரியவராது என்று கூறினார். அதே சமையம் அமலாபால் போன்ற பிரபலத்தை கோயிலுக்குள் அனுமதித்தால் அது எல்லோருக்கும் தெரியவரும் என்று கூறிய அவர், பின்னர் நடைமுறையை மீறியதாக கோயில் நிர்வாகம் மீது சர்ச்சை ஏற்படும் என்பதால் தான் அனுமதிக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.