சார், மேடம் என்று அழைக்கக்கூடாது: கேரளாவில் உத்தரவு
மாணவர்கள் பாலின வேறுபாடுகள் ஏதும் பார்க்காமல் ஆசிரியர்கள் அனைவரையும் 'டீச்சர்' என்று அழைக்க வேண்டும் என கேரள மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்(KSCPCR), கேரள பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. பொதுவாக, பெண் ஆசிரியர்களை 'மேடம்' என்றும் ஆண் ஆசிரியர்களை 'சார்' என்றும் அழைப்பது இந்தியாவில் வழக்கம். இனி, மாணவர்கள் ஆசிரியர்களை அப்படி அழைக்கக்கூடாது, 'டீச்சர்' என்று தான் அழைக்க வேண்டும் என இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 'மேடம்' 'சார்' என்ற வார்த்தைகளில் பாலின வேறுபாடுகள் இருப்பதால் 'டீச்சர்' என்ற வார்த்தைப் பரிந்துரைக்கப்ட்டுள்ளது. இந்த ஆணையத்தின் தலைவர் கே.வி.மனோஜ் குமார், உறுப்பினர் சி.விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 'டீச்சர்' என்ற வார்த்தையைப் பயன்படுத்த அறிவுறுத்துமாறு பள்ளிகல்வித்துறைக்கு புதன்கிழமை(ஜன:11) உத்தரவிட்டது.
சமத்துவத்திற்கான முதற்படி
'சார்' அல்லது 'மேடம்' என்று அழைப்பதற்குப் பதிலாக 'டீச்சர்' என்று அழைப்பதனால் குழந்தைகளிடையே சமத்துவம் வளரும், அதோடு ஆசிரியர்களுடனான அவர்களின் பற்றுதலும் அதிகரிக்கும் என்று குழந்தை உரிமைகள் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும், இதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை இரண்டு மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் கேரள பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிடபட்டுள்ளது. ஆசிரியர்களிடையே காட்டபடும் பாலின வேறுபாடுகளை தகர்த்தெறிய கோரி ஒருவர் மனு அளித்திருந்தாகவும் அந்த மனுவை பரிசீலித்ததன் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.