
பிரியாணி சாப்பிட்டதால் பெண் மரணம்!
செய்தி முன்னோட்டம்
கேரளாவில் பிரியாணி சாப்பிட்டதால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பீதியை கிளப்பி இருக்கிறது.
கெட்டுப்போன உணவை உண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமையே இதற்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அஞ்சு ஸ்ரீபார்வதி(20) என்பவர் டிசம்பர் 31 ஆம் தேதி காசர்கோட்டில் உள்ள ரோமன்சியா என்ற உணவகத்தில் உணவை ஆர்டர் செய்ததாகக் கூறப்படுகிறது.
அன்றிலிருந்து ஒவ்வாமைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், கடந்த ஜனவரி 7ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
முன்னதாக, சில நாட்களுக்கு முன், கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் வேலை செய்யும் செவிலியர் ஒருவர் கோழிக்கோடு உணவகத்தில் உணவு உண்டதால் உயிரிழந்தார்.
தரமற்ற உணவால் ஒரே வாரத்தில் இருவர் உயிரிழந்திருப்பது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
நடவடிக்கை
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:
"அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் சனிக்கிழமை (ஜனவரி 7) அதிகாலை உயிரிழந்துவிட்டார்" என்று காவல்துறை கூறியதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், உயிரிழந்தவரின் தடயவியல் அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
உணவகத்தின் உரிமையாளர் உட்பட 3 பேர் இதுவரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதை விரிவாக விசாரிக்கும் படி மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டிருக்கிறார்.
பத்தனம்திட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய வீணா ஜார்ஜ் கூறியதாவது:
"இந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்பு ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்தும், அந்த பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் டிஎம்ஓ விசாரித்து வருகிறார்."