தேசியளவிலான எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் - பாட்னா செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024ம்ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், எதிர்கட்சிகளை ஓரணியாக திரட்டும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார் என்று தெரிகிறது. இதற்காக அவர் பாட்னாவில் நாளை(ஜூன்.,23) தேசியளவிலான எதிர்க்கட்சி கூட்டத்தினை நடத்த ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி இவரின் அழைப்பினை ஏற்று இந்த எதிர்கட்சி பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், ஜார்கண்ட் முதல்வர் ஹேம்நாத் சோரன், ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிபிஐ பொது செயலாளர் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
"கருணாநிதியின் தளபதியாக நான் பங்கேற்கிறேன்"-மு.க.ஸ்டாலின்
இந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொள்ள போவதாக ஜூன் 20ம் தேதி நடந்த கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் தெரிவித்தார். இந்நிலையில் இன்று(ஜூன்.,22)மாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பீகார் தலைநகர் பாட்னா சென்றடைகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அங்கு நாளை நடக்கும் எதிர்க்கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், மீண்டும் அங்கிருந்து நாளை இரவு புறப்பட்டு சென்னைக்கு வந்தடைகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. முன்னதாக நேற்று முன்தினம் நடந்த கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பேசிய முதல்வர், "பீகார் மாநிலம், பாட்னாவில் மதசார்பற்ற ஜனநாயக சக்தி ஒருங்கிணைப்பு கூட்டமானது 23ம் தேதி நடக்கிறது. அதில் நானும் பங்கேற்கவுள்ளேன். ஜனநாயக போர்க்களத்தில் கருணாநிதியின் தளபதியாக நான் பங்கேற்கிறேன்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.