ஒரே முகவரியில் 42 ஷெல் நிறுவனங்கள்; லூத்ரா சகோதரர்கள் மீது நீளும் விசாரணை
செய்தி முன்னோட்டம்
கோவாவில் உள்ள பிரபல இரவு விடுதியான பிர்ச் பை ரோமியோ லேனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்துச் சம்பவத்தில் 25 பேர் பலியான நிலையில், இந்த விடுதியின் உரிமையாளர்களான சௌரப் மற்றும் கௌரவ் லூத்ரா சகோதரர்கள் மீதுப் புதிய மற்றும் பெரிய அளவிலான மோசடிப் புகார்கள் எழுந்துள்ளன. திடுக்கிடும் தகவல்களாக வெளியான இவை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு விவரம் இங்கே:-
முறைகேடு
ஒரே முகவரியில் 42 நிறுவனங்கள்: நிதி முறைகேடு சந்தேகம்
கோவா தீ விபத்தைத் தொடர்ந்து லூத்ரா சகோதரர்கள் தாய்லாந்திற்குத் தப்பிச் சென்ற நிலையில், அவர்கள் மீது நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்குப் பிறகு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வில், இந்தச் சகோதரர்கள் வடக்கு டெல்லியில் உள்ள ஒரே ஒரு அலுவலக முகவரியில் சுமார் 42 நிறுவனங்கள் மற்றும் எல்எல்பி நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள் என்பதைக் கண்டறிந்துள்ளன. இந்த 42 நிறுவனங்களில் பல, வெறும் காகிதங்களில் மட்டுமே இருக்கும் ஷெல் நிறுவனங்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பல நிறுவனங்கள் ஒரே முகவரியைப் பகிர்ந்து கொள்வது மற்றும் ஒரே இயக்குநர்கள் பல நிறுவனங்களில் இடம்பெறுவது ஆகியவை சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் போன்ற நிதி முறைகேடுகளுக்கான அறிகுறியாகும் என்று புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது
தாய்லாந்தில் கைது: இந்தியாவிற்கு அழைத்து வரும் பணி
தீ விபத்து நடந்த டிசம்பர் 7 ஆம் தேதி அதிகாலை, மீட்புப் பணிகள் நடந்துகொண்டிருந்தபோதே, லூத்ரா சகோதரர்கள் டெல்லியிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் தாய்லாந்தின் ஃபுக்கெட் நகருக்குத் தப்பிச் சென்றனர். இதனையடுத்து, இந்திய அரசு இவர்களின் பாஸ்போர்ட்டுகளைச் செல்லாததாக அறிவித்தது, இதனால் அவர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்படுவது எளிதானது. தற்போது தாய்லாந்து காவல்துறையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கோவா காவல்துறை அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இந்தத் தீ விபத்துச் சம்பவம், லூத்ரா சகோதரர்களின் ஆடம்பரமான இரவு விடுதி சாம்ராஜ்யம் மற்றும் அதன் பின்னணியில் இருந்த சிக்கலான பெருநிறுவனக் கட்டமைப்பைப் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.