வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; புயலாக வலுப்பெற வாய்ப்பு
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று வரும் 29ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இது அதற்கு அடுத்த 48 மணிநேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்த புயலுக்கு மியான்மர் அளித்துள்ள பரிந்துரைப்படி, 'MICHAUNG' என்று பெயரிடப்படப்போவதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது.
வரும் டிசம்பர் 5ம் தேதி இந்த புயல் கரையை கடக்கக்கூடும்
அதன்படி, இந்த புயலானது கிழக்கு இந்தியா, பங்களாதேஷ், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றும், வரும் டிசம்பர் 5ம் தேதி இந்த புயல் கரையை கடக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே கிழக்கில் ஏற்படும் காற்று வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது மிதமான மழை பெய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக வடக்கு அந்தமான் கடலோர பகுதிகளிலும், தெற்கு அந்தமான் கடல்பகுதியிலும் சூறாவளி காற்று மணிக்கு 40-45 கி.மீ., வேகத்திற்கும், இடையிடையே, 55கி.மீ., வேகத்திற்கும் வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.