நாடாளுமன்றத்தில் 'தேர்வு முறைக்கேடு தடுப்புத் திருத்தச் சட்ட மசோதா 2026' மீது இன்று காரசார விவாதம்
செய்தி முன்னோட்டம்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் கடந்த ஒரு வாரமாகச் செயல்படாமல் முடங்கியிருந்த நாடாளுமன்றத்தில், சபாநாயகர் ஓம் பிர்லாவின் முயற்சியால் அமைதி திரும்பியுள்ளது. இதையடுத்து, 'பொதுத் தேர்வுகள் (நேர்மையற்ற முறைகளைத் தடுத்தல்) திருத்தச் சட்ட மசோதா, 2026' மீது செவ்வாய்க்கிழமையன்று மக்களவையில் முதலாவது முக்கிய விவாதம் நடைபெறவுள்ளது. காக்கரொச் ஜனதா கட்சி (CJP) நடத்திய போராட்டங்களின் போது மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடி குறித்து அரசு விளக்கமளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் திங்கள்கிழமை அவையின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் ஓம் பிர்லா நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன.
முக்கிய அம்சங்கள்
புதிய மசோதாவின் முக்கிய அம்சங்கள்
முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார்.
2024-ஆம் ஆண்டு சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய திருத்தங்களின்படி, கூட்டுச் சதி மற்றும் திட்டமிடப்பட்ட வினாத்தாள் கசிவுவிற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், முறைகேடுகளில் ஈடுபடும் அமைப்புகளுக்கு ரூ. 10 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.
மேலும், அரசுப் பணி மற்றும் நுழைவுத் தேர்வுகளின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கும் பலத்த கட்டுப்பாடுகள் இதில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகள்
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையும் அரசின் பதிலும்
புதிய சட்டத்தை கொள்கை அளவில் ஆதரித்தாலும், டெல்லியில் அமைதியாகப் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை அத்துமீறல்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவையில் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான இந்த மசோதாவின் மீது விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கேட்டுக்கொண்டுள்ளார்.
தர்மேந்திர பிரதான் பதவி விலகிய பிறகு கல்வித்துறை சார்ந்த சீர்திருத்தங்கள் குறித்து நடைபெறும் முதல் பெரிய விவாதம் இதுவென்பதால், அரசியல் ரீதியாகவும் இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.