Loading...
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி! நெஞ்சுத் தொற்றால் டெல்லி அப்பல்லோவில் தீவிர சிகிச்சை
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி! நெஞ்சுத் தொற்றால் டெல்லி அப்பல்லோவில் தீவிர சிகிச்சை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 17, 2026
07:12 am

செய்தி முன்னோட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மூத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி, திடீர் நெஞ்சுத் தொற்று காரணமாக டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7.30 மணியளவில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், அங்குள்ள நுரையீரல் மருத்துவப் பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது 98 வயதாகும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய சந்திப்பு

முன்னதாக கடந்த அக்டோபர் 7 அன்று, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலுள்ள அத்வானியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது வாழ்த்துகளைப் பெற்றார்.

குஜராத் முதல்வராகப் பதவியேற்றது முதல் தொடர்ந்து 25 ஆண்டுகள் அரசுத் தலைவராக செயலாற்றிய வரலாற்று சாதனையை முன்னிட்டு அவர் இந்த சந்திப்பை மேற்கொண்டார்.

நாட்டின் வளர்ச்சிக்கும் பாஜகவின் வளர்ச்சிக்கும் அத்வானி ஆற்றிய மகத்தான பங்களிப்பை பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பதிவில் வெகுவாகப் பாராட்டி நினைவு கூர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக

பாஜகவின் வளர்ச்சிக்கு அத்வானி ஆற்றிய வரலாற்றுப் பங்களிப்பு

1927 ஆம் ஆண்டு கராச்சியில் பிறந்த எல்.கே. அத்வானி, தனது 15-வது வயதில் 1942 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பில் சுயம்சேவகராக இணைந்தார்.

1980-இல் பாஜக தொடங்கப்பட்ட பிறகு, 1986 முதல் 2005 வரை மூன்று முறை கட்சியின் தேசியத் தலைவராக பணியாற்றி, பாஜகவை நாட்டின் முதன்மை அரசியல் கட்சியாக மாற்றினார்.

மேலும், 1999 முதல் 2004 வரை நாட்டின் உள்துறை அமைச்சராகவும், 2002 முதல் 2004 வரை நாட்டின் துணைப் பிரதமருமாகவும் பதவி வகித்துள்ளார்.

ADVERTISEMENT

வயது முதிர்வு

பாரத ரத்னா விருதும் வயது முதிர்வு சார்ந்த சிகிச்சைகளும்

நாட்டிற்கு அவர் ஆற்றிய ஈடற்ற சேவையைப் பாராட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த ஆண்டு அவருக்கு இந்தியாவின் மிக உயரிய பாரத ரத்னா விருதை வழங்கி கௌரவித்தார்.

சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்ட அத்வானி, வயது முதிர்வு காரணமாக ஏற்கனவே கடந்த மே மாதம் இதே அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

தற்போது மீண்டும் நெஞ்சுத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ADVERTISEMENT