மணிப்பூர் வன்முறை: 3 மாதங்களில் காணாமல் போன 30 பேர்
கடந்த மே மாதம் மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்ததில் இருந்து குறைந்தது 30 பேர் காணாமல் போயுள்ளனர். விடுபட்ட புகார்களின் எண்ணிக்கை மற்றும் பதிவு செய்யப்படாத FIRகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காணாமல் போனவர்களை தேடும் பணி நடத்தப்பட்டு வருவதாகவும், ஆனால் இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மணிப்பூரில் இனக்கலவரம் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 6,000 க்கும் அதிகமான FIRகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மே 6ஆம் தேதி, மணிப்பூர் வன்முறைகளின் ஆரம்ப நாட்களில், பத்திரிகையாளர், ஆராய்ச்சியாளர் மற்றும் சமூக சேவகரான ஆட்டம் சமரேந்திர சிங்(47) காணாமல் போனார்.
ஜூலை 6 அன்று இம்பாலில் இன்னொரு சோகமான சம்பவம் நடந்தது
அதன்பிறகு அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. அவரது மனைவி கவிதா அவருக்கு ஏதோ மோசமாக நடந்துவிட்டது என்று நம்புகிறார். சமரேந்திர சிங்கின் நண்பர் யும்கைபாம் கிரண்குமார் சிங்கும் இன்னும் வீடு திரும்பவில்லை. இருவரும் காங்போக்பி மாவட்டத்தின் அடிவாரத்தில் உள்ள மணிப்பூர் ஒலிம்பிக் பூங்காவை ஒட்டிய சஹேபுங் பகுதிக்கு காரில் சென்றனர். ஆனால், அதற்கு பிறகு, அவர்களது செல்போன்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதால், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. பத்திரிகையாளரும் அவரது நண்பரும் காணாமல் போய் சரியாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஜூலை 6ஆம் தேதி இம்பாலில் இன்னொரு சோகமான சம்பவம் நடந்தது. நீட் பயிற்சி வகுப்புகளுக்கு சென்ற 17 வயது பெண்ணும் அவரது நண்பரும் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.