கற்போர் எழுத்தறிவு மையங்கள் 26 ஆயிரம் பள்ளிகளில் துவக்கம் - பள்ளி கல்வித்துறை
தமிழ்நாடு மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 26 ஆயிரத்து 349 பள்ளிகளில் கற்போர் எழுத்தறிவு மையங்களை அமைக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குனரான கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2011ம் ஆண்டு தமிழக மாநிலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அதில் பெரும்பாலானோர் படிப்பறிவு இல்லாதோர் என்பது தெரிய வந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு 15 வயதுக்கு மேற்பட்டோர் பலருக்கு அடிப்படை எழுத்தறிவு, படிப்பறிவு உள்ளிட்டவைகளான கல்வியறிவினை வழங்க புதிய பாரத எழுத்தறிவு திட்டம் உருவாக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
கற்பிக்கும் பணிகளில் தலா ஓர் தான்னார்வலர் செயல்படுவார்
இத்திட்டத்தின்படி, சுத்தமாக அடிப்படை படிப்பறிவு, எழுத்தறிவு கூட இல்லாத 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு கல்வி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து தற்போது அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் உயர்நிலை, நடுநிலை மற்றும் துவக்கப்பள்ளிகள் என 26 ஆயிரத்து 349 பள்ளி வளாகங்களில் கற்போர் எழுத்தறிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் கல்வியினை கற்பிக்கும் பணிகளில் தலா ஓர் தான்னார்வலர் என்னும் வீதத்தில் சேவை மனப்பான்மை உடையோர் செயல்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் பள்ளி இயங்கும் நாட்களில் இந்த கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் மாலை நேரத்தில் 2 மணிநேரம் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மையங்களில் கற்கும் அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவு குறித்த தேர்வு நடத்தப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.