15 ஆண்டுகளுக்கும் மேல் அரியர் இருக்கா? உங்களுக்கான கடைசி வாய்ப்பு
2001-2002 முதல் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் ஒருமுறை தேர்வெழுத சிறப்பு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2001-2002 முதல் சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்புகளில் சேர்ந்து அரியர் வைத்துள்ள மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நவம்பர்,டிசம்பரில் நடைபெறும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.5,000 சிறப்பு கட்டணம் மற்றும் ஒவ்வொரு தாளுக்கும் ரூ.225 தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 25. அண்ணா பல்கலைக் கழகத்தின் வலைதளத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு
கலை, அறிவியல் படிப்புகளைப் போல், பொறியியல் படிப்புகளில் 2001-2002 முதல் அரியர் வைத்துள்ள மாணவர்களும் இந்த சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கும் சிறப்புக் கட்டணம் ரூ.5,000 மற்றும் ஒவ்வொரு தாளுக்கும் ரூ.225 தேர்வுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 18 கடைசி தேதியாகும். இவர்களும் அண்ணா பல்கலைக் கழக அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, சென்னை, விழுப்புரம்,ஆரணி, சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை. நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.