Loading...
கேரளாவில் நிலச்சரிவு: பாறைசாலை அருகே ரயில் என்ஜின் தடம் புரண்டு விபத்து, தமிழக ரயில்கள் ரத்து
நாகர்கோவில் வழியாக இயக்கப்படும் பல தமிழக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன

கேரளாவில் நிலச்சரிவு: பாறைசாலை அருகே ரயில் என்ஜின் தடம் புரண்டு விபத்து, தமிழக ரயில்கள் ரத்து

எழுதியவர் Venkatalakshmi V
Oct 22, 2026
12:52 pm

செய்தி முன்னோட்டம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பாறைசாலை பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக ரயில் என்ஜின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதை அடுத்து, நாகர்கோவில் வழியாக இயக்கப்படும் பல தமிழக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருவனந்தபுரத்தில் உள்ள பாறைசாலை ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தண்டவாளத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நேரத்தில் அவ்வழியாக சென்ற பிலாஸ்பூர் - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் தண்டவாளத்தை விட்டு விலகித் தடம் புரண்டது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரத்து

ரத்து செய்யப்பட்ட பயணிகள் ரயில்கள்

தண்டவாளத்தில் உள்ள மண்சரிவை அகற்றும் பணிகளும், தடம் புரண்ட என்ஜினை மீட்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்றதால், பின்வரும் பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன:

திருவனந்தபுரம் வடக்கு - நாகர்கோவில் சந்திப்பு பயணிகள் ரயில்கள் (ரயில் எண்: 56306 & 56310)

நாகர்கோவில் சந்திப்பு - திருவனந்தபுரம் வடக்கு பயணிகள் ரயில்கள் (ரயில் எண்: 56309 & 56305)

நாகர்கோவில் சந்திப்பு - கொல்லம் பயணிகள் ரயில்கள் (ரயில் எண்: 56102 & 56101)

பிலாஸ்பூரிலிருந்து திருநெல்வேலி வந்த விரைவு ரயில் (22619) நெய்யாற்றின்கரையுடன் நிறுத்தப்பட்டு, பயணிகள் பேருந்துகள் மூலம் திருநெல்வேலிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதேபோல், தாம்பரத்திலிருந்து திருவனந்தபுரம் சென்ற அம்ரித் பாரத் ரயில் (16121) நாகர்கோவில் டவுன் வரை மட்டுமே இயக்கப்பட்டது.

ADVERTISEMENT