கேதர்நாத் யாத்திரை செல்லும் பாதையில் நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி, 19 பேர் மாயம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று(ஆகஸ்ட்.,3) இரவு கனமழை பெய்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனால் கேதர்நாத் யாத்திரை செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 19 பேர் மாயமாகி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் கவுரிகுண்ட் பகுதியின் அருகேயுள்ள பல கடைகள் அடித்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்பகுதிகளில் தற்போது தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகள் மற்றும் நிவாரணம் அளிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனிடையே இவர்களது இந்த பணிகளை மேற்கொள்ள பலத்த மழையும், நிலச்சரிவு ஏற்பட்டு ஆங்காங்கே உருண்டு விழும் பாறைகளும் இடையூறு அளிக்கிறது என்று வட்ட அதிகாரி விமல் ராவத் கூறியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்றும் கனமழை பெய்யும்
தொடர்ந்து பேசிய அவர், நேபாளத்தினை சேர்ந்தோர் உள்பட காணாமல் போனோர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அதன்படி காணாமல் போனவர்களுள் சில நபர்களின் விவரங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். அதேபோல் காணாமல் போனவர்கள் அப்பகுதிகளில் கடைகளை நடத்தி வந்தவர்களாக தான் இருக்க கூடும், யாத்திரை சென்றவர்கள் அல்ல என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்றும்(ஆகஸ்ட்.,4) உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெஹ்ரி, ருத்ரப்ரயாக், டேராடூன், பவுரி உள்ளிட்ட இடங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், சமோலி, அல்மோரா, பாகேஸ்வர், சம்பாவத் உள்ளிட்ட பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.