நிலச்சரிவால் உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தாமதம்
உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணி 70 மணி நேரத்திற்கும் மேலாக தொடந்து நடந்து வரும் நிலையில், அப்பகுதியில் ஏற்பட்ட புதிய நிலச்சரிவால் மீட்பு பணியில் இடையீறு ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 200 மீட்டர் பரப்பளவின் மீது சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததை அடுத்து, அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த 40 தொழிலாளர்கள் சுரங்கப்பாதைக்குள் சிக்கினர். அந்த தொழிலாளர்களை மீட்பதற்கு 70 மணிரத்திற்கும் மேலாக மீட்பு குழுக்கள் இடிந்து விழுந்த பாறைகளை அதிநவீன இயந்திரங்கள் கொண்டு துளையிட்டு வந்தன. ஆனால், நேற்று இரவு திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவால், தோண்டப்பட்டிருந்த துளைகள் மூடப்பட்டு, மீட்பு பணி பெரிதளவில் பாதிக்கப்பட்டது.
புது டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்ட புதிய இயந்திரங்கள்
இந்த துளையிடும் பணி முடிந்த பிறகு, 900 மிமீ விட்டம் கொண்ட ஒரு குழாயை உள்ளே அனுப்ப மீட்பு குழுக்கள் திட்டமிட்டிருந்தன. அந்த குழாய் வழியாக தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், நேற்று நடந்த நிலச்சரிவால் துளையிடும் ட்ரில்லிங் இயந்திரம் பழுதடைந்தது. மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில், புது டெல்லியில் இருந்து புதிய இயந்திரங்கள் இப்போது வரவழைக்கப்பட்டுள்ளன. உத்தரகாசி மாவட்ட மாஜிஸ்திரேட் அபிஷேக் ரூஹெலா, சிக்கிய தொழிலாளர்களை இன்று வெளியேற்றிவிடுவோம் என்று செய்தியாளர்களிடம் முன்பு தெரிவித்திருந்தார். "எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், சிக்கிய தொழிலாளர்கள் புதன்கிழமைக்குள் வெளியேற்றப்படுவார்கள்," என்று நேற்று மாலை விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பிறகு அவர் கூறினார். ஆனால், அந்த திட்டம் தற்போது தாமதமாகி இருக்கிறது.