பிரதமருக்கு சொந்தமாக குடும்பம் இல்லை என்று கூறிய லாலு பிரசாத்துக்கு பதிலடி: 'மோடியின் குடும்பம்' என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ள முக்கிய தலைவர்கள்
செய்தி முன்னோட்டம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா உள்ளிட்ட பாஜகவின் உயர்மட்ட தலைவர்கள் இன்று தங்கள் ட்விட்டர் கணக்குகளில் "மோடி கா பரிவார்"(மோடியின் குடும்பம்) என்ற முழக்கத்தைச் சேர்த்துள்ளனர்.
ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் நேற்று நடந்த ஒரு பேரணியில் பிரதமருக்கு "சொந்தமாக குடும்பம் இல்லை" என்று கூறியிருந்தார்.
அது நடந்து சில மணிநேரங்களில் தாங்கள் மோடியின் குடும்பத்தினர் என்பதை பறைசாற்றும் விதமாக அவர்கள் தங்கள் கணக்குகளில் "மோடி கா பரிவார்" என்ற வாசகத்தை சேர்த்துள்ளனர்.
இதற்கிடையில், இன்று தெலங்கானாவின் அடிலாபாத் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான புதிய முழக்கம் "நீங்கள் மோடிக்கு சொந்தம், மோடி உங்களுக்கு சொந்தம்" என்பது தான்" என்று கூறினார்.
இந்தியா
பிரதமர் மோடியை விமர்சித்த லாலு பிரசாத் யாதவ்
"தேசம் முழுவதும் இன்று ஒரே குரலில் 'நான் மோடியின் குடும்பம்' என்று கூறுகிறது" என்றும் பிரதமர் இன்று கூறினார்.
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஜன விஸ்வாஸ் மகா பேரணியில் கலந்து கொண்டு பேசிய லாலு பிரசாத் யாதவ், பிரதமர் மோடியின் பரம்பரை அரசியல் கருத்துக்கள் குறித்து விமர்சித்தார்.
"அதிக குழந்தைகளைக் கொண்டவர்கள் இந்த விவகாரத்தில் அவமானத்திற்கு ஆளாகிறார்கள்," என்று கூறிய பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், மோடிக்கு "சொந்தமாக குடும்பம் இல்லை" என்று விமர்த்திருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு ஆதராவாக பாஜக தலைவர்கள் இந்த புதிய 'மோடியின் குடும்பம்' பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.