மகாராஷ்டிராவில் தட்டம்மை நோய் பரவலைக் கட்டுப்படுத்த போதுமான அளவு தடுப்பூசிகள் வேண்டும் - எம்.பி. வேண்டுகோள்
மும்பையில் தட்டம்மையால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிராவில் தற்போது இந்நோய் விரைவாக பரவ துவங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அம்மாநில மருத்துவமனைகளுக்கு போதுமான அளவு தட்டம்மை தடுப்பூசி மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து எம்பி ராகுல் ஷெவாலே மக்களவையில் பேசுகையில், "மும்பை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் உள்ள குழந்தைகள் இந்த நோயால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இது மிகவும் வேகமாக பரவும் தொற்று நோய் ஆகும். மும்பையில் இந்த நோய் பரவலால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த தட்டம்மை நோய் பரவலை சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவது மூலம் கட்டுப்படுத்தலாம்." என்று கூறினார்.
மத்திய சுகாதார அமைச்சரால் குழு நியமனம்
இதனை தொடர்ந்து, "மும்பையில் உள்ள பல குடிசைப் பகுதிகளில் தட்டம்மை நோய் பரவியுள்ள சூழ்நிலையை நிர்வகிப்பதற்கும் உதவுவதற்கும் மத்திய சுகாதார அமைச்சரால் குழு நியமிக்கப்பட்டுள்ளது, இந்த குழுவானது சமீபத்தில் குடிசைப் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்." என்று மும்பை தெற்கு மத்திய எம்பி தெரிவித்தார். மேலும், உலக சுகாதார அமைப்பு தகவலின்படி, உலகளவில் 2018-2020ஆண்டுக்கு இடையில் தட்டம்மை தடுப்பூசி சரியாக போடப்பட்டதால் இறப்பு விகிதங்கள் 73 சதவீதம் வரை குறைந்திருந்ததாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.