இந்தி திணிப்பு: தயிர் பாக்கெட்டுகளில் 'தாஹி' என்ற பெயரை போட அறிவுறுத்தல்
தயிர் பாக்கெட்டுகளில் 'தாஹி' என்ற இந்தி வார்த்தையை போட வேண்டும் என்றும், 'தயிர்' 'மொசரு'(கன்னடம்) போன்ற தென் இந்திய மொழிகளை இந்தி வார்த்தைக்கு அருகில் அடைப்புக்குறிக்குள் போட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்(FSSAI), இதற்கான அறிவுறுத்தல்களை, கர்நாடக பால் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பிற்கு அனுப்பியுள்ளது. இந்த இரண்டு தென் மாநிலங்களின் பால் கூட்டமைப்புகள், கேரளாவுடன் சேர்ந்து, தயிர் பாக்கெட்டுகளில் உள்ளூர் பெயரிடலைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு கோரியதைத் அடுத்து, FSSAI இந்த அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
கர்நாடகாவில் எழுந்திருக்கும் எதிர்ப்புகள்
கர்நாடக பால் கூட்டமைப்புக்கு அனுப்பப்பட்டிருக்கும் கடிதத்தில் FSSAIஇன் இணை இயக்குனர் (அறிவியல் மற்றும் தரநிலை) கையெழுத்திட்டுள்ளார். அதில், "பின்வரும் எடுத்துக்காட்டுகளின்படி 'தாஹி' லேபிளிடப்படலாம். தாஹி (தயிர்), தாஹி (மொசரு), தாஹி (ஜாமுத் டவுடு), தாஹி(தாயிர்), தாஹி (பெருகு) போன்ற வெவ்வேறு மாநிலங்களின் பிராந்திய பெயரிடல் அடிப்படையில் 'தாஹி' லேபிளிடப்படலாம்." என்று கூறப்பட்டுள்ளது. பல குழுக்கள் ஏற்கனவே கர்நாடகா பால் சம்மேளனத்தின் அதிகாரிகளை சந்தித்து, பாக்கெட்டுகளில் தயிருக்கான உள்ளூர் வார்த்தைகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், "எல்லா வழிகளிலும் இந்தியைத் திணிக்கும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு" எதிராக தனது ஆட்சேபனைகளை எழுப்புமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.