குனோ பூங்காவில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுத்தை உயிரிழப்பு: மத்திய அரசு உயர்மட்ட குழு விசாரணை
செய்தி முன்னோட்டம்
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்கா எல்லையில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பலத்த காயமடைந்த 19 மாத ஆண் சிறுத்தை உயிரிழந்த சம்பவம் வனத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'KNG22' என அடையாளப்படுத்தப்பட்ட இந்த இளம் சிறுத்தையின் இறப்பு குறித்து விரிவான கள விசாரணை நடத்துவதற்காக மத்திய அரசு உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இன்று புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உடலில் இருந்து 5 குண்டுகள் மீட்பு
சிகிச்சை பலனின்றி மரணம்
குனோ தேசியப் பூங்காவின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு வெளியே மொரேனா பிரதேச வனப்பகுதியில் கடந்த அக்டோபர் 25 அன்று இந்தச் சிறுத்தை படுகாயங்களுடன் சுற்றித் திரிவதை வனத்துறையினர் கண்டறிந்தனர்.
உடனடியாக பிடிக்கப்பட்ட அந்தச் சிறுத்தை, ஜபல்பூரில் உள்ள அதிநவீன கால்நடை மருத்துவ சிகிச்சை மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அவசர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது.
அந்த அறுவை சிகிச்சையின் போது அதன் உடலில் இருந்து ஐந்து துப்பாக்கிக் குண்டுகள் அகற்றப்பட்டன.
இருப்பினும், குண்டுகள் பாய்ந்ததால் ஏற்பட்ட பலத்த உள்காயங்கள் காரணமாகத் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அக்டோபர் 27 அன்று அந்தச் சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்தது.
மத்திய உயர்மட்ட குழு
மாநில அரசின் அதிரடி நடவடிக்கை
இந்தியாவில் அழிந்துபோன சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் 'ப்ராஜெக்ட் சீட்டா' திட்டத்தின் கீழ் இச்சம்பவம் மிக முக்கியமானதாக கருதப்படுவதால், மத்திய அரசு இதனை அதீத தீவிரத்துடன் அணுகியுள்ளது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வனத்துறை ஐஜி, வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் கூடுதல் இயக்குநர் மற்றும் மண்டல துணை இயக்குநர் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவினர் மத்தியப் பிரதேசத்திற்கு விரைந்துள்ளனர்.
இக்குழுவினர் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து, அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து மத்திய அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.
மேலும், இந்தச் சதிச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கூண்டோடு பிடிக்க மத்தியப் பிரதேச அரசும் வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு அதிரடிப்படையை அமைத்து தீவிர வேட்டையைத் தொடங்கியுள்ளது.