16 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த பழனி முருகர் கோயில் கும்பாபிஷேகம்-ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி கோயிலில் 16ஆண்டுகளுக்கு பிறகு 2023ம்ஆண்டு 27ம்தேதி(நேற்று) விமரிசையாக நடந்தது. கடந்த 23ம்தேதி யாகசாலை பூஜைகளுடன் துவங்கிய இவ்விழா, 90 யாகசாலைகள் அமைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க எட்டுகால பூஜைகள் மலைக்கோயில் வளாகத்தில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் நடைபெற்றன. இதனைதொடர்ந்து,காலை 4.30மணிக்கு 8ம் கால வேள்வியுடன் திருக்குட நன்னீராட்டு பெருவிழா துவங்கியது. இதனையடுத்து மலைக்கோயில் பிரகாரத்தில் உள்ள ராஜகோபுரம், தங்கவிமானம் ஆகியவற்றிற்கு கங்கை, காவிரி போன்ற பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கொண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்ட பொழுது கூறியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், அரோகரா சரணம் கோஷம் எழுப்பி பக்தி பரவசம் அடைந்தனர்.
ஹெலிகாப்டர் மூலம் ராஜகோபுரம், பக்தர்கள் மீது பூக்கள் தூவப்பட்டது
அதன் பின்னர், கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது, கோபுர கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பிரத்யேகமாக ஹெலிகாப்டரில் இருந்து ராஜகோபுரம் மீதும், பக்தர்கள் மீதும் மலர்கள் தூவப்பட்டது. மேலும் மூலவர் சன்னதிகளுக்கு புனிதநீர் கொண்டு அபிஷேகம் நடந்தது. இந்த கும்பாபிஷேக திருவிழாவில் தமிழில் மந்திரங்கள் முழங்கப்பட்டது சிறப்புமிக்கதாக அமைந்தது. இதில் பங்கேற்க ஆன்லைனில் பதிவு செய்து, குலுக்கல் முறையில் தெரிவுசெய்யப்பட்ட 2 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். இவர்களோடு போலீசார், கோயில் பணியாளர்கள் என மொத்தம் 6 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், மற்ற பக்தர்களுக்காக 16 இடங்களில் பெரும் அளவிலான எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக 30சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது, 3000போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.