குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா: UNESCO அங்கீகாரம் பெற மாவட்ட நிர்வாகம் முயற்சி
செய்தி முன்னோட்டம்
தென்னிந்தியாவின் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் அக்டோபர் 20-ஆம் தேதி கடற்கரையில் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. 11 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும், சூரசம்ஹாரத்தன்று மட்டும் சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த 4,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் பணிக்காக 90 நிரந்தர சிசிடிவி கேமராக்களுடன், 175 தற்காலிக சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பக்தர்களுக்காக 355-க்கும் மேற்பட்ட கழிப்பறைகளும், குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தூய்மைப் பணிகளுக்காக கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
UNESCO அங்கீகாரம்
UNESCO அங்கீகாரம் பெற தீவிர முயற்சி
மைசூர் தசரா திருவிழாவை போல, குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவின் பாரம்பரிய சிறப்பைக் கருத்தில் கொண்டு, இதற்கு யுனெஸ்கோவின் 'அருவப் பண்பாட்டு பாரம்பரிய' அங்கீகாரத்தைப் பெற மாவட்ட நிர்வாகம் மற்றும் தசரா குழுவினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்திருவிழாவிற்கு மாநில அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், திருச்செந்தூர் முருகன் கோவில் திருவிழாவை போல மாவட்ட ஆட்சியரின் நேரடி மேற்பார்வையில் சிறப்பு நிதியுடன் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
சிறப்பு வழிபாடு
பக்தர்கள் ஏந்தும் வினோத வேடங்கள் மற்றும் சிறப்பு வழிபாடு
1885-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இத்திருவிழாவில், பக்தர்கள் காளி, முருகன், அனுமன், போலீஸ் மற்றும் பல்வேறு தெய்வங்களின் வேடங்களை அணிந்து ஊர் ஊராகச் சென்று காணிக்கை சேகரித்து, அம்மனை வழிபடுவது தனிச்சிறப்பாகும்.
சூரசம்ஹாரம் முடிந்து காப்பு அவிழ்க்கப்பட்ட பின்னரே பக்தர்கள் தங்களது விரதத்தை நிறைவு செய்வார்கள் என்பதால், சூரசம்ஹாரத்திற்கு அடுத்த நாள் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.