Loading...
கூடங்குளம் அணுமின் நிலைய ப்ளூபிரிண்ட் அவுட்? டார்க் வெப்பில் 19,000 ரகசிய ஆவணங்களை கசியவிட்ட ஹேக்கர்கள்
கூடங்குளம் அணுமின் நிலைய ரகசிய ஆவணங்கள் கசிவு

கூடங்குளம் அணுமின் நிலைய ப்ளூபிரிண்ட் அவுட்? டார்க் வெப்பில் 19,000 ரகசிய ஆவணங்களை கசியவிட்ட ஹேக்கர்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 15, 2026
03:39 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான தமிழ்நாட்டின் கூடங்குளம் அணுமின் நிலையத்தின்(KKNPP) உள்கட்டமைப்பு மற்றும் சப்ளையர்கள் தொடர்பான ஆயிரக்கணக்கான ரகசிய ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்திருப்பது இந்திய பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேர்ல்டு லீக்ஸ் என்ற பிரபல ரான்சம்வேர் ஹேக்கர் குழு, இந்தத் தரவுகள் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திடமிருந்து திருடப்பட்டவை எனக் குறிப்பிட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளது.

விளக்கம்

ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் யோட்டா டேட்டா சென்டர் விளக்கம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4 ஆகிய பிரிவுகளின் உள்கட்டமைப்பை வடிவமைத்து கட்டும் 2,000 மெகாவாட் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் 2018-ல் பெற்றது.

இந்தத் தரவு கசிவு குறித்து ரிலையன்ஸ் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"யோட்டா என்ற மூன்றாம் தரப்பு இந்திய டேட்டா சென்டர் சேவை நிறுவனத்தின் சர்வரில் சேமிக்கப்பட்டிருந்த தங்களது தரவுகளில் 'பகுதி அளவிலான ஊடுருவல்' நடந்துள்ளது உண்மைதான். இதுகுறித்து இந்திய அரசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளது.

கடந்த மே 29 அன்று ரிலையன்ஸ் சர்வரில் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டை கண்டறிந்து உடனடியாக அதைத் தடுத்ததாக யோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஜூன் இறுதியில் தரவுகள் கசிந்ததாக மிரட்டல் வந்ததையடுத்து விசாரணை அறிக்கை ரிலையன்ஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

விவரங்கள்

கசிந்த 19,000 ஆவணங்களில் என்ன இருக்கிறது?

ராய்ட்டர்ஸ் இந்த ஆவணங்களை ஆய்வு செய்து வெளியிட்டுள்ள விபரங்கள்படி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்தம் 8.5 லட்சம் கோப்புகளில், உணர்திறன் மிக்க 19,000 கோப்புகளை ஹேக்கர்கள் வெளியிட்டுள்ளனர். இவை 2016 முதல் 2025 பாதியாண்டு வரையிலானவை.

எனினும், அணு உலைகளின் மையப்பகுதி தொடர்பான தரவுகள் இதில் இல்லை. அவை ரஷ்யாவின் அரசு நிறுவனமான ரோசாட்டம் மூலம் நிர்வகிக்கப்படுபவை. ஆனால், கட்டுமானத்தில் உள்ள 3 மற்றும் 4 ஆம் பிரிவுகளின் வென்டிலேஷன் மற்றும் கூலிங் சிஸ்டம் ப்ளூபிரிண்ட்டுகள், மற்றும் அதன் 'காமன் கன்ட்ரோல் ரூம்' தள வடிவமைப்பு ஆகியவை இதில் அடங்கும்.

மேலும், சப்ளையர்கள் பட்டியல், உபகரணங்களின் தரம் மற்றும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் 112 மில்லியன் டாலர் காப்பீடு கோரும் பாலிசி ஆவணங்களும் கசிந்துள்ளன.

ADVERTISEMENT