போராடுவேன், வெற்றி பெறுவேன், மீண்டும் கட்சிக்கு செல்வேன்: பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட கேஎஸ் ஈஸ்வரப்பா
பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, கே.எஸ். ஈஸ்வரப்பா கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடும் முடிவை திங்கள்கிழமை அறிவித்தார். மேலும், தனது வெற்றியில் நம்பிக்கை உள்ளதாகவும், அதன்பின்னர், மீண்டும் பாஜகவுக்குத் திரும்பப் போவதாகவும் அவர் கூறினார். "கட்சி சாராத, சுயேச்சை வேட்பாளராக போட்டியிட முடிவு செய்துள்ளேன். எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. எந்த வெளியேற்றத்திற்கும் நான் அஞ்சவில்லை," என்று ஈஸ்வரப்பா ஊடகங்களுக்கு தெரிவித்தார். "தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் பா.ஜ.க.வுக்கு செல்வேன். ஐந்து முறை தாமரை சின்னத்தில் போட்டியிட்டுள்ளேன்" எனவும் அவர் கூறினார்.திங்களன்று, கட்சி ஒழுக்கத்தை மீறி, மக்களவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக அவரை ஆறு ஆண்டுகளுக்கு பாஜக நீக்கியது.
எதற்காக கிளர்ச்சி செயதார் ஈஸ்வரப்பா?
கர்நாடக முன்னாள் துணை முதல்வரும், கட்சியின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றியவருமான ஈஸ்வரப்பா, தேர்தல் களத்தில் சுயேச்சையாக இறங்குவதாக அறிவித்தார். ஈஸ்வரப்பாவின் மகன் கே.இ.காந்தேஷுக்கு ஹாவேரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட டிக்கெட் மறுக்கப்பட்டதற்கு, கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா மற்றும் அவரது தந்தையும் கட்சியின் மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா தான் காரணம் என ஈஸ்வரப்பா குற்றம் சாட்டினார். பாஜக சார்பில் ஹாவேரியில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையும், ஷிமோகா தொகுதியில் பாஜக வேட்பாளராக விஜயேந்திரரின் சகோதரரும் எம்பியுமான பி.ஒய்.ராகவேந்திரா போட்டியிடுகின்றனர். இதனால் ஈஸ்வரப்பா குற்றம் சாட்ட, அவரை கட்சியிலிருந்து நீக்கியது மாநில பாஜக அமைப்பு