கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 2 காட்டு யானைகள் நேற்று(மார்ச்.,14) கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து காட்டுகொல்லை கிராமத்தை சேர்ந்த எல்லப்பன் என்பவரது மகன் ராம்குமார்(27) இன்று(மார்ச்.,14) காலை மொட்டுப்பட்டி அருகேயுள்ள மலையடிவாரத்தில் இயற்கை உபாதைகளை கழிக்க சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. அப்போது அந்த மலையடிவார பகுதியில் இரண்டு காட்டு யானைகள் சுற்றித்திரிவதை ராம்குமார் பார்த்துள்ளார். அதனையடுத்து அவர் அந்த யானைகளை தனது போனில் படம்பிடிக்க முயற்சி செய்ததோடு, செல்பி எடுக்கவும் முயற்சி செய்துள்ளார்.
சம்பவ இடத்தியிலேயே உயிரிழந்த இளைஞர்
காட்டுயானைகளை ராம்குமார் செல்பி எடுக்க முயன்றபொழுது அவரை அந்த யானைகள் தாக்கியுள்ளது. யானைகள் தாக்குதலில் படுகாயம் அடைந்த ராம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாரூர் போலீசார் ராம்குமாரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். தொடர்ந்து அந்த மலையடிவாரத்தில் இருந்த யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், மேளங்கள் அடித்தும் துரத்தியுள்ளார்கள். அப்போது சப்பாணிப்பட்டி அருகே தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையினை கடந்து பாலக்கோடு வனப்பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. மேலும் யானைகள் சாலையை கடக்கும்பொழுது அவ்வழியாக வந்த கார் ஒன்றினை தனது தும்பிக்கையால் தாக்கியுள்ளது. இதில் காரில் சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக காரின் உள்ளே இருந்தவர்களுக்கு எவ்விதபாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.