கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி; சுங்கக் கட்டணம் உயர்வு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் பிரபல சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணத்தை நகராட்சி நிர்வாகம் தற்போது அதிரடியாக உயர்த்தியுள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற தலம் என்பதால், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் நகராட்சி விதிகளின்படி, ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சுங்கக் கட்டணம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். இதற்கு முன்னதாக கடந்த 2023 ஆம் ஆண்டு கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 2026 ஆம் ஆண்டிற்கான புதிய கட்டண உயர்வை நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் கீழ் நகராட்சி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
புதிய கட்டணம்
வாகன வாரியாக புதிய கட்டண விவரங்கள்
புதிய அறிவிப்பின்படி, பேருந்துகளுக்கான சுங்கக் கட்டணம் 250 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் 100 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் வேன்களுக்கான கட்டணம் 80 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், கார்கள் மற்றும் ஜீப் போன்ற சிறிய ரக வாகனங்களுக்கான கட்டணம் 60 ரூபாயிலிருந்து 80 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு மூலம் கிடைக்கும் வருவாய் நகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் கொடைக்கானல் செல்லும் பயணிகளுக்கு இந்த புதிய கட்டண உயர்வு கூடுதல் செலவை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.