
மனைவியை கொலை செய்ததற்காக ஒன்றரை ஆண்டுகள் சிறையிலிருக்கும் கணவன்; சம்பந்தப்பட்ட பெண் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி
செய்தி முன்னோட்டம்
கர்நாடகாவில் மனைவியைக் கொலை செய்ததாகக் கூறி கணவன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட பெண் உயிரோடு இருப்பது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து 2020 ஆம் ஆண்டு நடந்த இந்த கொலை விசாரணையில் உள்ள குறிப்பிடத்தக்க குறைபாடுகள் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குடகு நீதிமன்றம் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த அறிக்கை ஏப்ரல் 17 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மல்லிகா என்ற அந்த பெண் கடந்த டிசம்பர் 2020 இல் குஷால்நகரில் இருந்து காணாமல் போனார்.
பெட்டதரபுராவில் அவரது எலும்புக்கூட்டை மீட்டதாக போலீசார் கூறினர். அதன் அடிப்படையில் அவர்கள் சுரேஷை கைது செய்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
திருப்பம்
வழக்கின் முக்கிய திருப்பம்
இருப்பினும், விசாரணை ஏப்ரல் 1, 2025 அன்று வியத்தகு திருப்பத்தை ஏற்படுத்தியது. அப்போது மல்லிகா மடிகேரியில் மற்றொரு ஆணுடன் வசிப்பது கண்டறியப்பட்டது.
சுரேஷின் நண்பர் இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார், மேலும் மல்லிகா ஐந்தாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தனது கணவர் எதிர்கொள்ளும் சட்டரீதியான விளைவுகளை அறியாமல் ஓடிப்போனதாக அவர் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், டிஎன்ஏ உறுதிப்படுத்தலுக்காக காத்திருக்காமல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ததற்காக காவல்துறையினரை நீதிமன்றம் கண்டித்தது.
மேலும், விசாரணை அதிகாரிகளுக்கு இதுகுறித்து சம்மன் அனுப்பப்பட்டபோது, திருப்திகரமான விளக்கங்களை அவர்கள் வழங்கவில்லை.
பழங்குடியினர் ஆணையம்
பழங்குடியினர் நல ஆணையத்தை அணுக திட்டம்
முன்னதாக, சுரேஷ் தனது மனைவி காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்திருந்த நிலையில், அவரையே காவல்துறை கைது செய்து கொலை செய்ததாக ஒப்புக்கொள்ள அழுத்தம் கொடுத்ததாக ஒருபுறம் குற்றம் சாட்டப்படுகிறது.
சுரேஷிற்கு ஒரு ஆண் மற்றும் பெண் பிள்ளை உள்ள நிலையில், தங்கள் தந்தை நிரபராதி என்று அவர்களும் முறையிட்டுள்ளனர்.
சுரேஷ் கைது செய்யப்பட்டதால், அவரது பிள்ளைகளில் தங்கையை படிக்க வைப்பதற்காக அண்ணன் தனது கல்வியை நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு செல்வதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சுரேஷ் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சுரேஷின் வழக்கறிஞர் பண்டு பூஜாரி, நீதி மற்றும் இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தை அணுக திட்டமிட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் மனித உரிமைகள் மற்றும் பழங்குடியினர் ஆணையங்களையும் அணுகுவதாகவும் அறிவித்துள்ளார்.