
நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை: மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் என்ன?
செய்தி முன்னோட்டம்
"தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையில்" உருவாகியுள்ள "புதிய மற்றும் சிக்கலான அச்சுறுத்தல்களை" கருத்தில் கொண்டு, மே 7 புதன்கிழமை 244 வகைப்படுத்தப்பட்ட சிவில் பாதுகாப்பு மாதிரிப் பயிற்சிகளை (Mock Drill) அனைத்து மாவட்டங்களிலும் நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த அவசரக்கடிதம் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய தீயணைப்பு சேவை, சிவில் பாதுகாப்பு மற்றும் வீட்டுக் காவல்படை இயக்குநரகம் மூலம் அனுப்பட்டுள்ளது.
ஏப்ரல் 22 அன்று 26 பேர் கொல்லப்பட்ட ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நடத்திய உயர்மட்டக் கூட்டங்களுக்குப் பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நடவடிக்கைகள் #1
பயிற்சியின் முதன்மை நோக்கங்கள் என்ன?
எதிரி நாட்டு விமானங்கள் மற்றும் ஏவுகணை தாக்குல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை செய்யும் ஏர் சைரன்கள் செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவை முக்கிய இடங்களில் நிறுவப்பட்டு உடனடியாக செயல்படும் வகையில் பரிசோதித்தல்.
எதிரிநாட்டு தாக்குதலின் போது, பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையும் நடைமுறை
முதற்கட்ட மருத்துவ உதவி, எச்சரிக்கை குறியீடுகளை அடையாளம் காணுதல் போன்ற அடிப்படையான ராணுவ நடைமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு குறிப்பாக மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல்.
நடவடிக்கைகள் #2
முதன்மை நோக்கங்கள்
வான்வழி தாக்குதல் நடக்கும் சமயத்தில், எதிரிகள் குடியிருப்புகளை கண்டறிவதை தடுக்க, மின் சேவையை முழுமையாக நிறுத்தி இருளில் மூழ்கடிக்கும் நடைமுறைகளை செயல்படுத்துதல்.
அனல்மின் நிலையங்கள், ராணுவ கிடங்குகள், தொலைதொடர்பு மையங்கள் போன்ற முக்கிய கட்டமைப்புகள் எதிரிகளின் கண்ணில் படாமல் மறைக்கும் தொழில்நுட்பங்கள்.
அவசர காலங்களில் தகவல்களை உடனுக்குடன் புதுப்பித்தல் மற்றும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் திட்டங்கள் குறித்து ஒத்திகை பார்த்தல்.
இந்தப் பயிற்சி கிராம மட்டம் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பங்கேற்பாளர்கள்
இந்த mock drill-இன் முக்கிய பங்கேற்பாளர்கள்
மாவட்டக் கட்டுப்பாட்டாளர்கள், உள்ளூர் அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு வார்டன்கள், தன்னார்வலர்கள், ஊர்க்காவல் படையினர் (செயலில் உள்ளவர்கள் மற்றும் ரிசர்வ் வீரர்கள்), தேசிய கேடட் கார்ப்ஸ் (NCC), தேசிய சேவைத் திட்டம் (NSS), நேரு யுவ கேந்திர சங்கதன் (NYKS) மற்றும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகியோர் இந்தப் பயிற்சியில் தீவிரமாகப் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.