கலவரத்தை தூண்டும் கருத்துக்களை கூறியதாக மத்திய அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்தது கேரள காவல்துறை
செய்தி முன்னோட்டம்
மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது முகநூல் பதிவின் மூலம் மத நல்லிணக்கம் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக எர்ணாகுளம் மத்திய காவல்துறை இன்று வழக்குப் பதிவு செய்துள்ளது.
கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள களமசேரி பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை காலை நடந்த ஒரு கிறிஸ்தவ குழுவின் வழிபாட்டு கூட்டத்தில் திடீரென்று 3 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்புகளால் 3 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததை அடுத்து, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார்.
"வெட்கக்கேடான காங்கிரஸ்/சிபிஎம்/யுபிஏ/INDIA கூட்டணி ஆகியோர் கேரளாவில் வெறுப்பை பரப்பி, "ஜிஹாத்" நடத்த ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளனர்" என்று அவரது முகநூல் பதிவில் கூறப்பட்டிருந்தது.
பைவ்ஜன்
மத நல்லிணக்கத்தை கெடுத்ததற்காக வழக்கு பதிவு
"உங்கள் கொல்லைப்புறத்தில் பாம்புகளை வைத்து, அவை உங்கள் அண்டை வீட்டாரை மட்டுமே கடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. உங்களுக்கே தெரியும், இறுதியில் அந்த பாம்புகள் கொல்லைப்புறத்தில் உள்ளவர்களைத் தாக்கும் என்று". என்ற ஹிலாரி ரோதம் கிளிண்டனின் வார்த்தைகளையும் அவர் தனது முகநூல் பதிவில் மேற்கோள் காட்டி இருந்தார்.
மேலும், அந்த பதிவில் #HamasTerrorists மற்றும் #KochiTerrorAttacks ஆகிய ஹேஷ்டேக்குகளும் பயன்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், மத நல்லிணக்கத்தை கெடுத்ததற்காக IPCஇன் சட்டப்பிரிவு 153(a) மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைத்ததற்காக கேரள காவல்துறை சட்டம் 120 ஆகியவற்றின் கீழ் சந்திரசேகர் மீது இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டுமே ஜாமீனில் வரக்கூடிய குற்றங்களாகும்.